கோலாலம்பூர்:
கெபெங், குவாந்தானில், ‘ஓப் லாராஸ்’ (Op Laras) என்ற நடவடிக்கையின் மூலம், RM100,000 மதிப்புள்ள போலி துப்பாக்கிகள், ஏர்சாஃப்ட் (airsoft) துப்பாக்கிகளுடன், 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள், 21 முதல் 66 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், முன்னாள் இராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு தொழில்முறையாளர்கள் அடங்குவர்.
இவர்கள், அரச மலேசியக் கடற்படைக்கு சொந்தமான இடத்தில் ‘போர் விளையாட்டு’ (war games) நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, காவல்துறையினர், 65 துப்பாக்கிகள், 32 கைத்துப்பாக்கிகள், குண்டுகள், குண்டு துளைக்காத உடைகள், உருமறைப்பு உடைகள் உள்ளிட்ட, 406 பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இணையத்தில், ஒரு துப்பாக்கி, RM6,000 ரிங்கிட் வரை வாங்கப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது.
இந்த ஆயுதங்கள், பொதுமக்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தலாம் எனவும், மேலும், குற்றச் செயல்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும், விசாரணைக்காக நான்கு நாட்களுக்கு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் பிரிவு 8(a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது RM10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.





















