மனித உரிமை மீறலின் அடுத்தகட்டம் மனித விற்பனை

இன்றைய உலக நிலையில் மனித விற்பனை ( pemerdagangan manusia) விவகாரமானது அனைத்துலக பிரச்சினையாக கருதப்படுகின்றது. ஆனாலும் இந்த விவகாரம் குறித்து இன்னமும் பலருக்கு தெளிவான புரிதல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த மனித விற்பனை விவகாரம் என்பது என்ன? இதனால் யார் பாதிப்புகளை எதிர்நோக்கின்றனர்? இதன் விளைவுகள் என்னென்ன? இதில் ஊழல் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பது குறித்து மனித உரிமை சமூக ஆர்வலரும் மலேசிய அறிவியல் அகாடமி இணையருமான டத்தோ டாக்டர் மெடலின் பெர்மா தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

கே: இந்த மனித விற்பனை என்றால் என்ன? அதைப் பற்றி விளக்க முடியுமா?

ப: மனித விற்பனை குறித்து பல விதமான கருத்துக்களும் விளக்கங்களும் பரவி வருகின்றன.
ஆனால் மனித விற்பனை என்பது தொழிலுக்காக அந்நிய நாட்டினரை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் சட்ட விரோதமாக அழைத்து / கடத்தி வருவதாகும். இதில் விற்பனை – வாங்குதல் அம்சம் உள்ளது; பொருளுக்குப் பதிலாக மனிதர்கள். தேவைகள் அதிகம் உள்ள நாடுகளில் இருக்கின்ற வேலைகளுக்குக் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களைப் பணியமர்த்த மக்கள் அதிகம் உள்ள ஏழ்மை நிலை / முன்னேறும் நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக அழைத்து வருவர்.
பொதுவாக இதில் அழைத்து வரப்படுபவர்களில் ஏழ்மை நிலை நாடுகளைச் சேர்ந்தவர்களாவே இருப்பர். அதிலும் பலவந்த தொழிலாளர்களாகவும் அவர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவர். குறிப்பாக பாலியல் ரீதியிலான தொழிலுக்காக இந்த மனித விற்பனை அதிக அளவில் நிகழும்.

கே: இந்த மனித விற்பனை நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?

ப: எனக்குத் தெரிந்த வரையில் இந்த நடவடிக்கை நாடுகள் கடந்து மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இதனை மேற்கொள்பவர்கள் பல மாதிரியான செயல்பாடுகளைக் கையாளக்கூடும். அதிலும் நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கடக்கும்போது அவர்கள் யாரிடமும் சிக்காமல் இருக்க பல யுக்திகளைக் கையாளக்கூடும்.
அதிலும் இது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதால் தரை வழி, நீர் வழிப் பயணங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்குப் பொருட்கள் ஏற்றி வரும் கொள்கலனில் மனிதர்கள் அடைக்கப்பட்டு கடத்தப்பட்ட சம்பவத்தை நாம் ஏற்கெனவே கேள்வியுற்றிருக்கிறோம். அதிலும் இலக்கு வைக்கப்பட்ட நாட்டினை அடைவதற்கு முன்பாக கொள்கலனில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் உணவு, நீர், சுவாசக் காற்று இல்லாமல் மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

கே: நம் நாட்டையும் சில தரப்பினர் குறிவைத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக கேள்வியுறுகிறோம். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

ப : பொதுவாக இதர பல நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டின் பொருளாதாரம் உயர்ந்த நிலையில்தான் உள்ளது. அது மட்டுமன்றி நம் நாட்டில் கடைநிலை தொழிலுக்கு ஆள்பலம் தேவைப்படுகின்றது. அதிலும் ஒரு சில பொறுப்பற்றத் தரப்பினர் முறையான செயல்பாடுகள் மூலம் தொழிலாளர்களை வருவிப்பதைத் தவிர்த்து சட்ட விரோதமாக இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் தொழிலாளர்களைப் பெறுகின்றனர். இது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.
கே: ஏன் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும்? இதில் ஆபத்து இருக்கின்றதே…
ப: பொதுவாக உட்புற தோட்டப் பகுதிகள், தொழில் கிடங்குகள், விவசாய தளங்கள் போன்ற இடங்களில் வேலை செய்யவே ஒரு சில பொறுப்பற்றத் தரப்பினர் இந்த மனித விற்பனை நடவடிக்கையை நாடுகின்றனர். காரணம் இதன் மூலம் பணி அமர்த்தும் தொழிலாளர்களை அவர்கள் முறைப்படி வருவிக்க வேண்டியதில்லை, அதற்கான செலவுகளையும் செய்ய வேண்டிய தில்லை. மேலும் அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவான சம்பளம்கூட அவர்களுக்கு வழங்கலாம். இது தவிர விடுமுறை, சொக்சோ பாதுகாப்பு காப்புறுதி, தங்குமிட வசதிகள் போன்ற அரசாங்கம் வரையறுத்துள்ள அந்நியத் தொழிலாளர் அம்சங்களையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் குற்றமே. இந்த மனித விற்பனை விவகாரத்திற்கு வித்திடும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக ஊழலும் இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

கே: இந்த மனித விற்பனை நடவடிக்கையில் ஊழல் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது? இந்த விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தவிர்த்து இதர இலாகாக்களின் பங்களிப்பும் அவசியம்தானே? ஊடகங்களும் எவ்வாறு தங்கள் பங்களிப்பை வழங்கலாம்?

ப: மனித விற்பனை விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையாகக் கருதுகின்றது. காரணம் இது அடிப்படை மனித உரிமையையும் தேசியப் பாதுகாப்பையும் உட்படுத்தியுள்ளது.
பொதுவாகச் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்றாலே அதில் ஊழல் போன்ற விவகாரங்கள் இருக்கக்கூடும். அதேபோல் இந்த விவகாரத்தில் பல்வேறு அம்சங்களில் ஊழல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. பல வெளிநாடுகளில் இந்த மனித விற்பனை விவகாரத்தில் அமலாக்கத் தரப்பினருள் ஊழல் நடவடிக்கை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதையும் முன்னதாக நாம் கேள்வியுற்றுள்ளோம்.
இந்நிலையில் நம் நாட்டில் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகின்றது. இந்தப் பிரச்சினையைக் களைவதற்கு அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றது.
அதேபோல் இந்த மனித விற்பனை நடவடிக்கையை நாட்டில் முறியடிக்க சம்பந்தப்பட்ட அனைத்து அமலாக்கப் பிரிவினரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். அதேபோல் ஊடகங்களும் மனித விற்பனை விவகாரம் அல்லது அது சம்பந்தமான சம்பவக்களைத் தீர ஆய்வுசெய்து பிரசுரித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கே : இந்த மனித விற்பனை நடவடிக்கையை முற்றாக தடுக்க எம்மாதிரியான நடவடிக்கைகள் அவசியமாகின்றது?

ப: இந்த குற்றச் செயல் புதிதாக தொடங்கப்படவில்லை. மாறாக பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்ற இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டுமென்றால் முதலில் சமூகத்தில் விழிப் புணர்வு அவசியம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் சுய லாபத்திற்காக சட்ட விரோதமாகத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதை மக்கள் நிறுத்திக் கொண்டு அரசாங்கம் இது சம்பந்தமாக மேற்கொள்ளும் பாதுகாப்பு – அமலாக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நாம் அனைவரும் இணைந்து முன் நின்றால் நம் நாட்டில் இந்த மனித விற்பனை நடவடிக்கையைத் தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here