மக்களுக்கு உண்மைச் செய்திகளை சமுதாய அக்கறையோடு வழங்குவது அவசியம் பெர்னாமா தமிழ்ப் பிரிவு தலைவருடன் ஒரு நேர்காணல்

ஊடகம் என்பது மக்களுக்கு முக்கியப் பங்காற்றும் ஒரு துறையாகும். இந்த ஊடகத்துறையில் ஒரு சம்பவத்தைப் பதிவு செய்து அதனைத் தொகுத்து செய்தியாக உருவாக்கி மக்களுக்குச் சென்றடையச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
குறிப்பாக தற்போது சமூக ஊடகங்களிலும் ஆன்லைனிலும் வெளியிடப்படும் செய்தியும் உடனுக்குடன் மக்களுக்குச் சரியான தகவல்களை வழங்குவது அவசியமாகின்றது.
அவ்வகையில் பெர்னாமா தமிழ்ப்பிரிவுத் தலைவர் வனிதா கோவிந்தன் அந்த ஊடகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் ஓசையுடன் தகவலைப் பகிர்ந்து கொள்கின்றார்.

கே: பெர்னாமாவுடன் உங்களின் பயணம் குறித்து கூறுங்கள்.
ப: நான் 2001ஆம் ஆண்டில் நிருபராக இந்த ஊடகத்தில் என் பணியைத் தொடங்கினேன். அதன் பிறகு செய்தித் தயாரிப்பாளர், இதர பல பணிகளைக் கடந்து 5 மாதங்களுக்கு முன்னதாக தமிழ்ப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்றேன்.

கே: பெர்னாமா தமிழ்ப்பிரிவு எப்போது தொடங்கப்பட்டது?
ப: தொடக்கத்தில் 2002ஆம் ஆண்டு தனியார் அலைவரிங்கை்கு 15 நிமிட செய்தித் தொகுப்புக்காக இந்தத் தமிழ்ப்பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓரிரு முறை இப்பிரிவு மூடப்பட்டு 2018ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

கே: பெர்னாமா தமிழ்ப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து கூற முடியுமா?
ப: தலைமையகத்தில் இந்தப் பிரிவுக்கு 7 பணியாளர்கள் உள்ளனர். அதே சமயம் மாநில அளவில் உள்ள பெர்னாமா பிரிவினரின் செய்திகளையும் நாங்கள் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து கொள்வோம். அதேபோல் இங்கு எங்களுக்கென்று உலாவி அடிப்படையிலான செய்தி அறை செயல்முறை உள்ளது. அதில் பதிவு செய்யப்படும் செய்திகள் அனைத்தையும் நாங்கள் பார்வையிட்டு அதில் தமிழ்ப் பிரிவுக்குத் தேவைப்படும் செய்திகளை எடுத்து மொழியாக்கம் செய்து கொள்வோம்.
மேலும் இங்கிருந்தும்கூட நிருபர்களும் புகைப்பட – வீடியோ பதிவு கலைஞர்களும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்று செய்திகளைச் சேகரித்து வருவர்.
குறிப்பாக சில நிகழ்ச்சிகள் தொடர்பான அழைப்பு முன்கூட்டியே கிடைக்கப் பெறுவதால் அதில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகளை நிருபர்கள் முன்னதாகவே தயார் செய்து கொள்வர். அதற்கு ஆசிரியர்களும் செய்தித் தயாரிப்பாளர்களும் உறுதுணையாக இருப்பர்.
நிருபர்கள் செய்தி சேகரித்து வந்தவுடன் அவர்களாகவே எந்த விவகாரத்தை முன்னிருத்தப் போகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் – தயாரிப்பாளர்களுடன் இணைந்து முடிவு செய்வர். அதற்கேற்ற காணொலி- புகைப்படங்களையும் அவர்களே தேர்ந்தெடுப்பர். அதன் பிறகு செய்திகள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பிற்குத் தயார் செய்யப்படும்.
பொதுவாக பெர்னாமா தமிழ்ச் செய்தி இருநிலைப்படும்.
1. நேரடியாகச் செய்தியாளர்கள் செய்திகளை வாசிப்பர்.
2. சம்பவங்கள் தொடர்பான காணொலி அல்லது புகைப்படங்கள் ஒளிபரப்பப்படும்போது செய்தியாளர்கள் பின்னணிக் குரலில் செய்தி வாசிப்பர்.
இந்தப் பின்னணிக் குரலுக்கான பதிவு முன்கூட்டியே நடைபெற்று விடும். நாங்கள் தொகுத்து தரும் செய்திகளைப் பிரித்தெடுத்து பின்னணிக் குரலுக்கான பதிவை முன்பே செய்து விடுவோம். அந்தப் பதிவுக்கான காணொலி அல்லது புகைப்படங்கள் இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும். நேரடி ஒளிபரப்புச் செய்தி நேரத்தில் இந்தப் பின்னணித் தொகுப்பும் இணைக்கப்படும்.

கே: செய்தி வாசிப்பாளர் எவ்வாறு இப்படைப்பிற்குத் தயாராவர்?
ப: பொதுவாக பின்னணிக் குரல் முன்கூட்டியே பதிவு செய்யப்படுவதை அடுத்து மாலை 5.00 மணிக்கு வாசிப்பாளர் தயார் நடவடிக்கையில் ஈடுபடுவார். 7.00 மணி செய்தி நேரடி ஒளிபரப்பிற்கு அவர் 6.50 மணிக்கே முழுநிலையில் தயாராகி விடுவார். நேரடி முறையிலான செய்திகள் ஃபிராம்டர் முறையில் அவர் வாசிப்பார்.

கே: இந்த ஃபிராம்டர் முறையில் செய்தி வாசிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
ப: ஃபிராம்டர் முறையில் பெரும்பாலும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாது. தொழில்நுட்பப் பணியாளர்கள் முன்கூட்டியே அனைத்தையும் சரிபார்த்து விடுவர். ஆனாலும் பாதுகாப்புக் கருதி செய்தி வாசிப்பாளர் முன் ஒரு டேப் தொழில்நுட்பக் கருவி வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கருவியில் செய்திகள் உள்ளடங்கி இருக்கும். ஃபிராம்டர் முறையில் கோளாறு ஏற்பட்டால் இந்த டேப் கருவியைப் பார்த்து அவர்கள் செய்தியை வாசிப்பர்.

கே: இந்தச் செய்தித் தொகுப்பில் எப்படிச் செய்திகளைத் தரம் பிரிப்பீர்கள்?
ப: பொதுவாக இன்றைய தினம் நடைபெறும் அல்லது நிகழும் முக்கியச் சம்பவங்கள் சார்ந்தே முதன்மைச் செய்திகள் அமைந்திருக்கும். இது தவிர வெளிநாட்டு நடப்புகள், கலை, விளையாட்டு, பொருளாதாரம், சமூகம் சார்ந்த செய்திகளும் இடம்பெறும்.

கே: இந்த ஆசிரியர் – செய்தித் தயாரிப்பாளர் பணிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?
ப: ஆசிரியர் என்பவர் செய்திகளைத் திருத்தி அதனை முறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார். இது தவிர புதிய செய்திகளை உருவாக்கும் பணிகளையும் அவர்கள் மேற்கொள்வர். தொடர்ந்து வெளியே செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்களுக்கும் ஆலோசனை வழங்குவர். அதேசமயம் செய்தி தயாரிப்பாளர் பணியானது குறிப்பிட்ட தினத்தன்று வெளியிடப்படும் செய்திகள் அனைத்தையும் சரிபார்த்து அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு நாளில் வெளியிடப்படும் செய்திகளில் சர்ச்சைகள் ஏதும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்து எந்தெந்தச் செய்திகள், எந்தெந்த இடங்களில் இடம்பெற வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை அன்றைய தினம் தயாரிப்பளார் பொறுப்பை ஏற்றிருப்பவருக்கு உள்ளது. இந்தப் பணியை நாங்கள் சுழற்சி முறையில் மேற்கொள்வோம். எங்கள் தமிழ்ப் பிரிவில் நாங்கள் அனைவரும் எங்களின் பங்களிப்பைத் தெளிவாக உணர்ந்து செயல்படுகிறோம். எல்லாருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் வேலை நடக்கும். இங்குள்ள அனைத்துப் பணியாளர்களின் பங்களிப்பையும் தெளிவாகக் காண முடியும்.

கே: பெர்னாமா அகப்பக்கம், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவது குறித்து கூற முடியுமா?
ப: அகப்பக்கத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடக்கூடிய செய்திகளை நாங்கள் உருவாக்குவோம். அதிலும் நாங்கள் பயன்படுத்தும் செய்தி அறையில் செயல்முறையில் இருக்கின்ற மாற்று மொழி செய்திகளைத் தமிழில் மொழிமாற்றம் செய்துகொள்வோம்.
அதேபோல் எங்கள் நிருபர்கள் வெளியில் இருந்து சேகரித்து வரும் செய்திகளையும் இத்தளங்களில் இடம்பெறச் செய்வோம். உடனுக்குடன் செய்திகளை வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் முக்கிய அம்சங்களை முன்னிருத்தி இந்தச் செய்திகள் உருவாக்கப்படும். அதிலும் சமூகக் கடப்பாடு அம்சத்தை நாங்கள் எப்போதும் கவனத்தில் கொள்வோம்.
உதாரணத்திற்கு ஒரு விபத்து நிகழ்ந்திருந்தால் அதற்கான புகைப்படம் பார்வையாளர்கள் கருதி சென்சர் செய்யப்பட்டிர்க்கும். நாங்கள் மற்றவர்களுக்குக் குறிப்பாக சம்பந்தப்பட்டவர்களுக்குக் கவலையை அதிகரிக்கக்கூடிய புகைப்படங்கள், தகவல்களை ஒருபோதும் பகிர்வதில்லை. ஆனாலும் உண்மையை மட்டும் தெளிவாகக் கூற வேண்டும் என்ற கடப்பாடும் எங்களுக்கு உள்ளது.

கே: சமூக வலைத்தளங்களில் உங்களின் ஈடுபாட்டிற்கு எந்தளவு வரவேற்பு கிடைத்துள்ளது?
ப: நாங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எங்கள் செய்திகளைப் பதிவிடுகின்றோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. தொழில்நுட்ப மாற்றத்தில் இது ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here