70% இருதய நோயாளிகள் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள்! டாக்டர் தமிழ்ச்செல்வம் வழங்கும் ஆலோசனைகள்!

இருதய நோய்களுக்கும் அதன் தொடர்பான சிகிச்சைகளுக்கும் தலைநகரில் முதன்மையான மருத்துவமனையாகத் திகழ்வது சிவிஎஸ் (Cardiac Vascular Sentral&CVS) மருத்துவமனை. பரிக்பீல்ட்ஸ் நியூ சென்ட்ரல் வளாகத்தில் இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையின் இருதய நோய்களுக்கான நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் மு.தமிழ்ச்செல்வம் மக்கள் ஓசையில் வெளிவந்த கடந்த சில கட்டுரைகளில், அவரின் வாழ்க்கையைப் பின்னணியையும் இருதய நோய் தொடர்பான பல பயனுள்ள விவரங்களையும் சிவிஎஸ் மருத்துவமனையில் வழங்கப்படும் அதிநவீன சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்தும் பலதரப்பட்ட தகவல்களையும் நமக்கு வழங்கியிருந்தார்.
மீண்டும் அவரைக் கடந்த வாரம் சந்தித்தபோது எதைப் பற்றி கூறப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவர் முன் அமர்ந்தோம். இந்த முறை நீரிழிவு நோய் (Diabetes & டயாபட்டிஸ்) பற்றி பேசலாமா? என்று ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வம்.
நாங்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தோம். என்ன இன்றைக்குத் தனது வழக்கமான இருதய நோய் மருத்துவத்தை விட்டு விட்டு, சம்பந்தமில்லாத நீரிழிவு நோய் குறித்து பேசத் தொடங்குகிறாரே என்ற கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தோம்.
எங்களின் சந்தேகத்தைப் புரிந்துகொண்டவர்போல் அவர் பேசத் தொடங்கினார். நீங்கள் என்னை ஆச்சரியத்தோடு ஏன் பார்க்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. இதுவரை இருதய நோய்கள் குறித்து பேசிவந்த நான், இப்போது திடீரென வேறொரு துறையான நீரிழிவு நோய் பற்றி ஏன் பேசுகிறேன்? அதற்குக் காரணங்கள் பல உண்டு. முதலாவதாக என்னிடம் வரும் இருதய நோயாளிகளுள் 70 விழுக்காட்டினர் நீரிழிவு நோய் தொடர்பான பரச்சினைகளைக் கொண்டவர்கள். 30 விழுக்காட்டினர் மட்டுமே முழுக்க முழுக்க நேரடியாக இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மாறிவரும் வாழ்க்கைச் சூழல் அதில் முதன்மையானது. நமது உணவு முறைகளும்
நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்றவர், எனவே நீரிழிவு நோய் வராமல் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்புகளை ஏற்படுத்திக்கொள்வதால் அதன்மூலம் இருதய நோய்களை உங்களால் தவிர்க்க முடியும் என்ற செய்தியைச் சொல்வதுதான் எனது நோக்கம். அதுமட்டுமல்லாமல் நீரிழிவு நோய் கண்டு
விட்டவர்கள் முன்கூட்டியே பரிசோதனைகள் மூலம் நோயின் தாக்கத்தை அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் அந்த நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அதன்மூலம் இருதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் எனவும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று விளக்கிய தமிழ்ச்செல்வம் நீரிழிவு நோய் குறித்தும் அதன் தொடர்பல் ஏற்படும் இருதய நோய்கள் குறித்தும் பல அரிய – முக்கிய – விவரங்களைப் பகிர்ந்தார். அவற்றில் சில குறிப்படத்தக்க அம்சங்களைப் பார்ப்போம்.

நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்?

முதலாவது வகை நீரிழிவு நோய் என்பது சிலருக்குப் பதின்ம வயதிலேயே வரக்கூடியது. அந்த இளம் வயதிலேயே அவர்களுக்கு இன்சுலின் செலுத்துவதன் மூலமே அந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். இந்த வகை நோயைப் பற்றி நாம் அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. பெரும்பாலான மனிதர்களைப் பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும் (டைப் 2).
பொதுவாக நீரிழிவு நோய்கள் பாரம்பரிய அடிப்படையில் 90 விழுக்காடு வரக்கூடியதாகும். அதாவது பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளுக்கு வருவதற்கு 90 விழுக்காடு சாத்தியம் உண்டு. இதனால் பென்கிரியாஸ் எனப்படும் கணையத்தின் இன்சுலின் (உடலில் சேரும் இனிப்பை மாற்றும் சுரப்ப இது) என்ற சுரப்ப உற்பத்தி குறைவதால், அதனை மாத்திரைகளாலோ ஊசி வழி மருந்துகளாலோ செலுத்தி நீரிழிவு நோயைக்
கட்டுப்படுத்த வேண்டியதிருக்கிறது.

மலேசியாவில் அதிக மரணங்கள் நிகழ்வது நீரிழிவு நோயால்…

இரண்டாவது வகை நீரிழிவு நோய் பாதித்தவர்களுள் 40 முதல் 50 விழுக்காட்டினர் 30 வயதைக் கடந்தவர்கள். மலேசியாவில் அதிகமாக மரணத்தை விளைக்கும் நோய்களுள் நீரிழிவு முதன்மை வகிக்கிறது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு மக்களில் 6 முதல் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே நீரிழிவு நோய் இருந்தது. இப்போது மக்களில் 30 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோய் பாதிப்புகள் இருக்கின்றன. அடுத்த 30 வருடங்களில் 40 முதல் 50 விழுக்காடு வரை இந்த எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் பருமனிலும் நீரிழிவு நோய் பாதிப்பலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமூட்டும். இந்த நீரிழிவு நோய் கண்டவர்களுள் சுமார் 55 விழுக்காட்டினருக்கு மாரடைப்பு, இருதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு, மூளைச் செயல்பாடு இழப்பு, பக்கவாதத் தாக்குதல் ஆகியவற்றால் மரணங்கள் ஏற்படுகின்றன.
சிறுநீர் கோளாறுகள் ஏற்படுவதற்கான முதன்மைக் காரணமும் நீரிழிவு நோயால்தான்.
என்னிடம் சிகிச்சைக்காக வரும் இருதய நோயாளிகளுள் 70 முதல் 80 விழுக்காட்டினர் நீரிழிவு தொடர்பான பிரச்சினைகளைக் கொண்டிருப்பவர்கள். பலருக்கு பார்வைத் திறன் குறைவதற்கும் நீரிழிவு நோயே காரணமாகிறது. எனவே இந்த நீரிழிவு நோயை நமது முதன்மை எதிரியாக நினைத்து நாம் போராட வேண்டும். இளம் வயதிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் தகுந்த வாழ்க்கை முறையையும், முறையான உணவுப் பழக்கங்களையும் கற்பக்க வேண்டும். அவர்களுக்கு விளையாட்டுகளைக் கற்றுத் தர வேண்டும். உடற்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அவர்கள் உடல் பருமன் ஆகிவிடாமல் இருக்க, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இளம் வயதிலேயே எடுக்க வேண்டும். நீரிழிவு நோயால் இன்றைய இந்த மோசமான சூழ்நிலைக்குக் காரணம், மாறிவிட்ட நமது வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கங்களும்தான் என்பதை உணர வேண்டும்!

மாறிய வாழ்க்கைச் சூழல் – காரணங்கள் என்ன?

நமக்கு முந்தைய தலைமுறையினர் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களின் உணவு முறையும் வேறுபட்டிருந்தது. குறைந்த அளவே உட்கொண்டார்கள். இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. நாம் எல்லாரும் காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ வேலைகளுக்குச் செல்கிறோம். நம்மிடையே உடற்பயிற்சி செய்பவர்கள் மிகவும் குறைவு. அதிக நேரம் தொலைக்காட்சியிலும் கைப்பேசிகளிலும் நேரத்தைச் செலவிடுகிறோம். சமூக ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடக்கிறோம். நாம் நடந்து செல்வது நமக்கு வியர்ப்பது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. அடுத்ததாக உணவு முறைகள். இப்போது 24 மணி நேர உணவகங்கள் செயல்படுகின்றன. அதிலும் துரித உணவுகள் என்ற பெயரில் பலவகை உணவுகள் ருசிக்காகப் பரிமாறப்படுகின்றன. காபோஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச் சத்து நிறைந்த உணவுகளையும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் அதிகம் உண்கிறோம். சக்கரை அதிகளவில் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துகின்றோம். இதனால் இளம் வயதினரிடையே உடல்பருமன் அதிகளவில் காணப்படுகிறது. முன்பெல்லாம் நூறு மாணவர்களைப் பார்த்தால் அதில் ஓரிருவர்தாம் உடல்பருமனாக இருப்பர். இப்போது பதின்ம வயதினரில் 30 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் உடல் பருமனைக் கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பரிசோதனைகள் அவசியம்! மிக இளம் வயதிலேயே ஒவ்வொருவரும் தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்குக்கூட நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது டைப்-1 எனப்படும் நீரிழிவு என்றால் நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்த இளம் வயதினருக்கு வருவது டைப்-2 எனப்படும் நீரிழிவு. அதாவது வாழ்க்கைச் சூழலாலும், உணவுப் பழக்கங்களாலும் பெரும்பாலும் வருவது. ஆரம்பத்திலேயே நோய் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அதற்குரிய சிகிச்சை முறைகளை முறையாகப் பன்பற்றி வந்தால் பிற்காலத்தில் இந்த நோயின் கடுமையான பாதிப்புகளில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய் கண்டவர்களுக்கு அந்த நோயின் கடுமையான பாதிப்புகள் ஏற்பட 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம். எனவே, இளம் வயதிலேயே நீரிழிவு கண்டவர்கள் 50 வயதுக்குள்ளேயே மோசமானப் பாதிப்புகளைச் சந்தித்து விடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

மருந்துகளால் மட்டும் குணமாகும் என எதிர்பார்க்காதீர்கள்!

நீரிழிவு நோய் கண்டவர்களும் – நீரிழிவு நோய் வரக்கூடாது எனக் கருதுபவர்களும் – முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, மருந்துகளால் மட்டும் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்பதுதான். சரியான உணவுப் பழக்கமும் வழக்கமான உடற்பயிற்சிகளும்தாம் மிகவும் முக்கியம். நேரடியாக இனிப்பைச்
சாப்படுவதைத் தவிர்க்கும் பலர், நிறைய மாவுச்
சத்து உணவுகளை உண்கிறார்கள்.
சர்க்கரை மறைமுகமாக அதிக அளவில் இருக்கும் தின்பண்டங்களை உண்பார்கள். இந்த உணவுகள் அனைத்தும் சர்க்கரையாக உடலுக்குள் மாற்றம் காண்கிறது. இதுவும் நீரிழிவு நோய் அதிகரிப்புக்கான காரணங்களுள் ஒன்றாகும்.
இந்த நேரத்தில் இன்னொரு எச்சரிக்கையையும் விடுக்க விரும்புகின்றேன். ஒரு ரொட்டி சானாய், ஒரு கோப்பை தேநீர் – இரண்டும் சேர்ந்தால் 400 கேலரி அளவு கொண்டிருக்கும். நீங்கள் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்தால் 400 முதல் 500 கேலரிகளை எரிக்க முடியும். எனவே ஒருசிலரைப்போல் ஒரு மணி நேரம் நடந்துவிட்டு அதன்பின்னர் ஒரு ரொட்டி
சானாயும் ஒரு கோப்பை தேநீரையும் சாப்பட்டுவிட்டால் உங்கள் எடை குறையும் என எதிர்பார்க்காதீர்கள். உணவுகளைக் கட்டுப்படுத்துவதோடு, உடற்பயிற்சிகளையும் செய்தால்தான் நீங்கள் மாற்றங்களை அடைய முடியும். சாப்பாடுகள் எப்படி இருந்தாலும், தொந்திவிழாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். நீரிழிவு, இருதயநோய் கண்டவர்களுள் பெரும்பாலோர் தொந்தி உள்ளவர்களாக இருப்பார்கள். நீரிழிவு நோய் கண்டவர்களுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் நோயின் தீவிரம் கடுமையாகும் என்பதால், முன்கூட்டியே பரிசோதனை செய்துகொள்வதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதும் முக்கியமாகும். கால் பகுதிகளில் நரம்பு செயல்பாடுகள் குறித்து பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. காரணம் பலருக்கு நீரிழிவு நோயால் நரம்புகள் பாதிப்புகள் ஏற்பட்டு அதன் காரணமாகக் கால் பகுதியை அகற்றுதல், மருத்துவ உலகில் வழக்கமாகிவிட்டது. நரம்புகள் என்னும்போது மைக்ரோ, மேக்ரோ என இருவகை நரம்புகள் உள்ளன. கண்களில் இருக்கும் நரம்புகள் மைக்ரோ என்னும் மெல்லிய நரம்புகளாகும். கால்களில் காணப்படுவதும் இருதயத்துக்குச் செல்பவையும் மேக்ரோ என்னும் பெரிய வகை இரத்தக் குழாய்களாகும்.

விரதங்கள் நன்மை பயக்கும்

நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விரதங்கள், இப்போது மருத்துவ ரீதியாகப் பயன் உள்ளவையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது இண்டர்
மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்னும் விரதங்கள் நல்ல பயன்கள் தருகின்றன. பொதுவாக இரவு உணவை சீக்கிரமாகவே முடித்து விட்டு, அதன்பறகு எதுவும் சாப்பிடாமல் இருந்து, காலையில் சாப்படுவது – இந்த இடைப்பட்ட சுமார் 12 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் தவிர்ப்பது – போன்ற நடைமுறையிலான விரதங்கள் நல்ல பலன்களைத் தருகின்றன. உங்கள் மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டு அந்த விரத முறைகளை நீங்கள் முறையாகப் பின்பற்றலாம்.

சிவிஎஸ் மருத்துவமனையின் நீரிழிவு,
இருதய நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகள்

எங்களின் சிவிஎஸ் மருத்துவமனையில் இருதய நோய் குறித்த சிறப்பு சிகிச்சைகளோடு நீரிழிவு நோய் குறித்த நவீன சிகிச்சைகளையும் வழங்குகிறோம். உதாணமாக, என்னிடம் வரும் இருதய நோயாளிகளுக்கு நீரிழிவுப் பிரச்சினைகள் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டால் அவர்களை எங்கள் மருத்துவமனையிலேயே அதற்குரிய நிபுணத்துவ மருத்துவர்களிடம் நாங்களே
பரிசோதித்து அனுப்பிவைப்போம். அவர்களின் கால்கள்
பரிசோதிக்கப்பட்டு ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் அவர்களுக்குக் கூடுதலாகச் சிகிச்சைகள் ஏதும் தேவையா என்பது குறித்தும் நாங்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவோம். சிறுநீரகப் பாதிப்புகள் இருந்தால் அதற்குரிய பரிசோதனைகளையும்
சிகிச்சைகளையும் வழங்குகிறோம். கண்களைப்
பரிசோதித்து நீரிழிவு நோயால் அவர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்வோம். கேடராக்ட் (Cataract) என்னும் பாதிப்புக்கு அடுத்து, மக்கள் அதிக அளவில் பார்வைக் குறைவுக்கு ஆளாவது நீரிழிவு நோயால்தான்! எனவே, நீரிழிவு நோய் கண்டவர்களின் கண்பார்வையையும் நாங்கள் பரிசோதிப்போம்.
நீரிழிவு நோய் கண்டவர்களின் கால் நரம்புகளில் – இரத்தக் குழாய்களில் – அடைப்புகள் ஏற்பட்டிருந்தால், அவர்களை வாஸ்குலர் மருத்துவ நிபுணர்களிடம் அனுப்ப வைப்போம். அவர்களுக்கு கால் இரத்தக் குழாய்களின் அடைப்பை சரி செய்ய முடியுமா அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை அந்த
மருத்துவ நிபுணர்கள் நிர்ணயம் செய்வார்கள்.
மேலும், நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மருந்துகள்- ஊசிகள் மட்டுமே தீர்வல்ல! இப்போது வாரம் ஒருமுறை செலுத்திக் கொள்ளும் பல சிறந்த மருந்துகள் கண்டுபடிக்
கப்பட்டிருக்கின்றன. இந்த மருந்துகளைச் செலுத்திக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். இத்தகைய மருந்துகளால், சிறுநீரகங்கள், இருதயம், கல்லீரல் போன்றவை வலிமையடையும். உடல் எடை போடுவது கட்டுக்குள் வரும். எனவே, இத்தகைய புதிய மருந்துகள் குறித்த ஆலோசனைகளையும் எங்கள் மருத்துவமனையில் வழங்குகிறோம்.
நான் ஏற்கனவே, வெளிவந்த கட்டுரைகளில் கூறியிருந்தபடி, தொடங்கிய குறைந்த ஆண்டுகளிலேயே சிவிஎஸ் மருத்துவமனையை இருதய நோய் சிகிச்சைகளுக்கான முதன்மை மருத்துவமனையாக நாங்கள் எங்களின் சிறந்த நிபுணத்துவத்தாலும்,
சேவையாலும் உருவாக்கியிருக்கிறோம். பல நுணுக்கமான, சிரமமான அறுவைச் சிகிச்சைகளை கடந்த ஆண்டுகளில் மேற்கொண்டிருக்கிறோம். இருதய நோய் கண்டவர்களில் 70 விழுக்காட்டினர் நீரிழிவு நோய் பாதிப்புகள் உடையவர்கள் என்பதால் இப்போது இந்தத் துறையிலும் எங்களின் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
எனவே, நிறைவாக நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புவது கீழ்க்காணும் அம்சங்களைத்தான்!
அதை மட்டும் எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நலமுடன் நீண்ட காலம் உற்சாகமாக வாழுங்கள்!
உணவுக் கட்டுப்பாடு அவசியம்
உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள்
உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here