படகு கவிழ்ந்ததில் 6 மீனவர்கள் 16 மணி நேர தத்தளிப்பின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 7 :

லங்காவி அருகே பூலாவ் தீமூனுக்கு தென்கிழக்கே 8.2 கடல் மைல் தொலைவில், நேற்று படகு கவிழ்ந்ததில் 6 மீனவர்கள் 16 மணி நேர தத்தளிப்பின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கெடா/பெர்லிஸ் கடல்சார் அமலாக்க துறை இயக்குநர் முதல் அட்மிரல் (கடல்) ரோம்லி முஸ்தபா கூறுகையில், காலை 8.55 மணிக்கு ஒரு மீனவரிடமிருந்து தமது துறைக்கு இந்த சம்பவம் பற்றிய அறிக்கை கிடைத்தது என்றார்.

மோசமான வானிலை காரணமாக, நேற்று மாலை 6 மணியளவில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் மிதப்பதாகக் கூறப்பட்ட இடத்திற்கு பெர்காசா 1228 என்ற படகு அனுப்பப்பட்டது.

“பாதிக்கப்பட்ட அனைவரும் அப்பகுதியில் இருந்த உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பெர்காசா 1228 படகில் ஏற்றி லங்காவியில் உள்ள புக்கிட் மாலுட் ஜெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் 34 மற்றும் 70 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் மீன்பிடித்த பிறகு மாலை 4 மணியளவில் கோலா பெர்லிஸிலுள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

படகில் தண்ணீர் வேகமாக புகுந்ததால் அது மூழ்கியது என்றார். அதிர்ஷ்டவசமாக அனைத்து மீனவர்களும் லைப் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு இருந்தனர் என்றார்.

“16 மணி நேரம் நீரில் தத்தளித்ததால் ஏற்பட்ட சோர்வு காரணமாக, அவர்களில் ஒருவர் லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

“ஏதேனும் அவசர அல்லது விபத்து ஏற்பட்டால், கெடா மற்றும் பெர்லிஸ் மாநில கடல்சார் செயல்பாட்டு மையத்தின் ஆன்லைன் 24 மணிநேர அவசரகால செயல்பாட்டுக்கு MERS 999 அல்லது 04-9662750 என்ற எண்ணில் கோலக் கெடா கடல்சார் மண்டல செயல்பாட்டு மையம் மூலம் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here