காவலாளியை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட் 7 :

கடந்த வியாழன் அன்று, காவலாளி ஒருவருக்கு வாளைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதாக ஆடவர் ஒருவர் மீது, இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நிரந்தர வேலை இல்லாத, குற்றம் சாட்டப்பட்ட ஆர்.சுப்பிரமணியம், 41, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி ரோஸ்லான் ஹமீத் முன்நிலையில், வாசிக்கப்பட்டவுடன் அவர் அதனை ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் அளித்தார்.

குற்றச்சாட்டின்படி, இங்கு அருகிலுள்ள பெடோங், கம்போங் சுங்கை பந்தாரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர், ஆகஸ்ட் 4 மாலை 4.40 மணியளவில், இங்குள்ள புக்கிட் பாயான், சியாரா 4 வீட்டுத் திட்ட குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வரும் இஸ்மாயில் அகமட், 58, என்பவருக்குப் பலத்த காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வாளால் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது சவுக்கடியும் விதிக்கும் தண்டனைச் சட்டம் பிரிவு 326-ன் படி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் சுல்ஃபாட்ஸ்லி ஹாசன் கையாண்டார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

பாதிக்கப்பட்டவரின் முழு மருத்துவ அறிக்கையை இன்னும் கிடைக்கப் பெறாததால், அடுத்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியை வழக்கின் மறு தேதியாக நீதிபதி ரோஸ்லான் நிர்ணயித்தார்.

மேலும், வழக்கு முடியும் வரை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கோல முடா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்ட சுப்ரமணியத்தை ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM12,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

கடந்த வியாழனன்று இடம்பெற்ற சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட காவலாளி அவரை கண்டித்ததால், கோபமடைந்த சந்தேக நபர் அவரை வாளால் தாக்கியதில், பாதுகாவலர் ஒருவர் தலையிலும் இடது கையிலும் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here