பேரரசர் தம்பதியினர் துருக்கியேக்கு அரசுமுறைப் பயணம்

செப்பாங், ஆகஸ்ட் 15 :

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று துருக்கியே புறப்பட்டுச் சென்றனர்.

பேரரசர் தம்பதியினரை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம், இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) பூங்கா ராயா வளாகத்தில் இருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டது.

அவர்களை வழியனுப்புவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அவரது மனைவி, டத்தின்ஸ்ரீ முஹைனி ஜைனல் அபிடின் ஆகியோருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேரரசர் தம்பதிகள் புறப்படுவதற்கு முன், 21 பீரங்கி குண்டுகள் முழங்கப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும் நான்கு அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்களைக் கொண்ட அரசு மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாலியனால் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இதற்கிடையில், இஸ்தானா நெகாரா அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஃபாடில் ஷம்சுதீன், இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், துருக்கியே நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் அழைப்பின் பேரில் பேரரசர் தம்பதியினர் இந்த அரசுமுறைப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு துர்க்கியே நாட்டுக்கான அரசுமுறைப் பயணம் திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here