கோல திரெங்கானு, ஆகஸ்ட் 15:
இங்குள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் தனது முதலாளியின் இரண்டு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்ததாக, இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அப்துல் ரஹீம் டின் கூறுகையில், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாயார் அதே நாளில் கோல திரெங்கானு மாவட்ட காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 48 வயது இந்தோனேசியப் பெண் கைது செய்யப்பட்டார் என்றார்.
“பாதிக்கப்பட்டவர்களின் தாயின் புகாரின்படி, சந்தேக நபர் ஒரு குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றியதோடு, பாதிக்கப்பட்டவரின் கை மூட்டுகள் விலகும்வரை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
“மூன்று வயது மற்றும் 20 மாத வயதுடைய இரண்டு சகோதரர்களும், சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு (HSNZ) பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் நாங்கள் இன்னும் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்,” என்று இன்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அப்துல் ரஹீமின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் தாயார் போலீசில் புகாரளிப்பதற்கு முன்பு, சந்தேக நபரின் நடவடிக்கைகள் கடந்த சனிக்கிழமை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.
சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.








