பாலிக் பூலாவ், ஆகஸ்ட் 20 :
சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸாம் ஷா பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளுக்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையை பயன்படுத்தாமல், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற மூன்று பதின்மவயதினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) மாலை 4 மணியளவில், தீவை நோக்கிய பாலத்தின் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாக பினாங்கு துணை காவல்துறைத் தலைவர், டத்தோ ஃபைசல் சாலே கூறினார்.
“13, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று வாலிபர்களும் பேராக், பத்து காஜாவில் இருந்து மாநிலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
“இரண்டாவது பாலத்தை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் பாதையை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
“அவர்களைக் கைது செய்த பின்னர், இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி தெலுக் கும்பார், பயான் லெப்பாஸில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
“மோட்டார் சைக்கிளை 17 வயது பள்ளி செல்லும் வாலிபர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் சென்றார். அவரின் பின்னிருக்கை பயணிக்கு 13 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் பாலிக் பூலாவ்வில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ”திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் போலி நம்பர் பிளேட்டும் இருந்தது” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், DCP ஃபைசல் கூறுகையில், அவரது நண்பர், 16 வயது, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர், அவர் சொந்தமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவதாகவும், மோட்டார் சைக்கிள் உரிமம் உள்ளதாகவும் கூறினார்.
“இருப்பினும், அனுமதிக்கப்பட்ட விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யாதது, மோட்டார் சைக்கிளை மாற்றியமைத்தது உட்பட பல குற்றங்கள் காரணமாக நாங்கள் நான்கு தண்டங்கள் விதிக்கப்பட்டது.
மேலும் விசாரணைக்காக இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் நாம் கைப்பற்றினோம்.
“முதல் சந்தேகநபரான 17 வயதுடையவர், நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார், மற்ற இருவரும் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
“சிறார்களைப் புறக்கணிக்கும் அல்லது அவர்களை சரியானமுறையில் கண்காணிக்காத பெற்றோர்களுக்கு எதிராக, குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 33ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்பதால், குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.