கோலாலம்பூரில் பொற்கொல்லர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது..!

கோலாலம்பூர், செப்டம்பர் 6 :

பொற்கொல்லர்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று பேர் கெப்போங் மற்றும் பழைய கிள்ளான் சாலையில் பிடிபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 8.54 மணியளவில் 42 மற்றும் 43 வயதுடைய இருவரை கெப்போங்கில் இருந்து வந்த காவல்துறையின் ரோந்துக் குழு கைது செய்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

“சந்தேக நபர்களின் காரை சோதனை செய்ததில் நான்கு 9 மிமீ தோட்டாக்கள் கொண்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 6 .38 தோட்டாக்கள் கொண்ட ரிவால்வர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 18 தோட்டாக்களையும் நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் இன்று செவ்வாயன்று (செப்டம்பர் 6) கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட போது, அருகில் இருந்த பொற்கொல்லரிடம் கொள்ளையடிக்க ஆயத்தமாகி கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அஸ்மி கூறினார்.

“மேலதிக விசாரணையின் விளைவாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பழைய கிள்ளான் சாலையில் உள்ள ஒரு வீட்டில் 47 வயதுடைய நபரின் வீட்டில் போலீசார் சோதனையிட்டதுடன் அந்த நபரையும் கைது செய்தனர், அவர் கும்பலின் மூளையாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

RM129,300 ரொக்கம் மற்றும் RM175,000 மதிப்புள்ள நகைகள் நிரப்பப்பட்ட 39 பொட்டலங்கள் உட்பட பல பொருட்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அஸ்மி மேலும் கூறினார்.

“சந்தேக அன்பர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு உட்பட அவரது குற்றப் பதிவில் இதற்கு முந்தைய ஐந்து வழக்குகள் உள்ளன. அனைத்து சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இந்த கும்பல் எவ்வளவு காலமாக செயல்பட்டு வருகிறது என்று போலீசார் விசாரித்து வருவதாகவும் இக்கும்பலின் மேலும் சில உறுப்பினர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம் இருந்தால் அவர்களையும் நாங்கள் மேலும் கைது செய்வோம்.

மேலும் அவர்களுக்கு கைத்துப்பாக்கிகள் எப்படி கிடைத்தன என்பதையும் நாங்கள் விசாரிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தகவல் தெரிந்தவர்கள் 03-2115999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் ஒரு காவல் நிலையத்திற்கு KL போலீஸ் ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணையர் அஸ்மி மேலும் கூறினார்.

“நகரில் துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை எப்போதும் முடுக்கி விடுவோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here