வீட்டில் தயாரித்த வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

ஈப்போ: லெங்காங் அருகே உள்ள லாத்தா கெகாபு பொழுதுபோக்கு மையத்தில் நேற்று வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

உயிரிழந்தவர் அமிருதின் கைருடின் (44) என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜெரிக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பலத்த காயமடைந்தவர் அஸ்லான் அலி (40) என அடையாளம் காணப்பட்டார்.

அவர் மேல் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.12 மணிக்கு கெரிக் போலீஸாருக்கு புகார் வந்தது. விசாரணைக்காக ஒரு குழு உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, ​​ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார், மற்றவர் பலத்த காயமடைந்தார்.

வெடிபொருட்கள் சட்டம் 1957 பிரிவு 8ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், மீன் பிடிப்பதற்கு வெடிமருந்துகளை பயன்படுத்துதல், பொழுதுபோக்கு பகுதிகளை மீன்பிடிக்க இடமாக பயன்படுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். சம்பவத்தின் போது இருவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here