சிலாங்கூர் சுல்தான் நஜிப் மற்றும் ரோஸ்மாவின் பட்டங்களை ரத்து செய்தார்

கிரிமினல் வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஓர் ஊழல் குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யும்படி அழைக்கப்பட்டிருக்கும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோருக்கு வழங்கிய உயர் விருதுகளை சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தால் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நேற்றுப் பறித்தார்.

இங்கு இஸ்தானா அலாம் ஷாவில் மாநில சிறப்பு அரச மன்றக் கூட்டத்திற்கு நேற்று தலைமையேற்ற பின்னர் சுல்தான் இம்முடிவை எடுத்ததாக சிலாங்கூர் மாநில பேராளர் டத்தோ அரிஃப் காசிம் இங்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.
2022 செப்டம்பர் 12ஆம் தேதி இந்த விருது வாபஸ் அமலுக்கு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2004ஆம் ஆண்டு ஸ்ரீபடுக்கா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்பிஎம்எஸ்) எனப்படும் முதல்தர விருதை சிலாங்கூர் சுல்தான், நஜிப்பிற்குச் சுட்டினார். இந்த விருது டத்தோஸ்ரீ என்று அழைக்கப்படுவதாகும்.

அதேசமயம் 1992ஆம் ஆண்டு டிபிஎம்எஸ் எனப்படும் இரண்டாம்தர டத்தோ விருதை நஜிப்பிற்கு வழங்கி சுல்தான் கௌரவித்தார். ரோஸ்மாவுக்கு 2005ஆம் ஆண்டில் எஸ்பிஎம்எஸ் எனப்படும் முதல்தர டத்தின்ஸ்ரீ படுக்கா விருது வழங்கப்பட்டது.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் நிதியை நம்பிக்கை மோசடி செய்தது, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தது, சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிவரித்தனையில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இத்தண்டனையையும் அபராதத் தொகையையும் நாட்டின் உச்ச நீதிமன்றமான பெடரல் நீதிமன்றம் 2022 ஆகஸ்டு 23ஆம் தேதி நிலைநிறுத்தியது. அதேபோல் ரோஸ்மா லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனிடையே புறநகர் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் அரிஃப் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்த உயரிய விருதையும் சுல்தான் பறித்தார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 2021 ஜனவரி 23ஆம் தேதி ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here