சமூக ஊடகங்களில் பிரதமர் தொடர்பில் வெளியிடப்பட்ட அவதூறான காணொலிகளை உடனடியாக நீக்குமாறு லோக்மன் ஆடாமுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், செப்டம்பர் 12:

டத்தோ லோக்மான் நூர் ஆடாம் தனது சமூக ஊடகக் கணக்குகளில் பிரதமரை அவதூறு செய்ததாகக் கூறப்படும் அனைத்து வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று, இன்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தது.

பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாத் கேசவன் கூறுகையில், நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரோசைன் தனது கட்சிக்காரரும் அம்னோ துணைத் தலைவருமான இஸ்மாயில் சபரியின் விண்ணப்பத்தை அனுமதிக்கும் முடிவைத் தொடர்ந்து இது நடந்ததாகக் கூறினார்.

‘Bila Presiden UMNO Panggil Tak Datang! Tapi PM Ada Masa Jumpa Mahathir – Lokman Adam’ என்ற தலைப்பில் இது பிரதிவாதியின் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டது.

“சமூக ஊடகத்திலோ அல்லது பிரதிவாதிக்கு ( லோக்மன் ஆடாம்) சொந்தமான வேறு எந்த இணையதளத்திலோ பிரதிவாதியோ அல்லது அவரது முகவர்களோ இதேபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது,” என்று அவர் இன்று நீதிமன்ற அறைகளில் நடைபெற்ற நடவடிக்கைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

கேசவன் மேலும் கூறுகையில், எதிர்வரும் செப். 26ல் இருதரப்பு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here