99 வயதில் வாக்களித்த டாக்டர் ஹண்டே: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, தமிழகத்தை அடுத்து ஆட்சி செய்யப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தலில் வாக்களிப்பதற்காக பல்வேறு வாக்குச்சாவடிகளில் காலை 6 மணியில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து இருந்தனர். 7 மணிக்கு பிறகு இளம்பெண்களும் வாலிபர்களும் மிகுந்த ஆர்வத்தோடு திரண்டு வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலுமே முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டு போடுவதற்கு காலையிலேயே ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் மிகுந்த விறுவிறுப்போடு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி இதுவரை 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்தநிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே (வயது 99). எக்ஸ் தளத்தில் ஹெச்.வி.ஹண்டேவின் பதிவை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

வாக்களிப்பது வெறும் உரிமை மட்டுமல்ல, நாம் விட்டு செல்லும் எதிர்காலத்துக்கான பொறுப்பு. இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே 1999-ல் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here