ஷா ஆலம் நகராண்மைக்கழகத்தின் இரண்டு அதிகாரிகள் உட்பட மூன்று நபர்கள், மாநில அரசு திட்டத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஒருவர் ஒப்பந்ததாரர் என்று எம்ஏசிசி மூத்த விசாரணை இயக்குனர் டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் ஹாஷிம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
இதற்கிடையில், ஷா ஆலம் மேயர் டத்தோ ஜமானி அகமட் மன்சோர், நகராண்மைக்கழகம் இன்னும் எம்ஏசிசி அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், இது வெள்ளத்தடுப்புத் திட்டத்துடன் தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். ஜமானியின் கூற்றுப்படி, இந்த திட்டம் இன்னும் மாநில அரசாங்கத்துடன் கலந்துரையாடல் கட்டத்தில் உள்ளது மற்றும் இன்னும் தொடங்கப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமை, விஸ்மா MBSA நடந்ததாகக் கூறப்படும் சோதனையின் போது, எம்ஏசிசி வளாகத்தில் இருந்து சில கோப்புகளை எடுத்ததா என்பதையும் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. அப்போது, அனைத்து மூத்த அதிகாரிகளும் பட்ஜெட் விவாதத்தில் கலந்துகொண்டனர். சிலர் சோதனை நடந்ததாகச் சொன்னார்கள். ஆனால் நான் அங்கு இல்லாததால் என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் எம்ஏசிசியிடம் இருந்து எனக்கு எந்தத் தகவலும் இன்னும் வரவில்லை என்றார்.









