கோலாலம்பூர்:
டெங்கில், சைபர்சவுத் (Cybersouth, Dengkil) செல்லும் முக்கியச் சாலையில் அதிகளவில் ஆணிகளும் கூர்மையான உலோகப் பொருட்களும் தூவப்பட்டிருந்ததை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்றியுள்ளனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ‘ujangtakaful551’ என்ற கணக்கைக் கொண்ட போலிஸ் அதிகாரி மற்றும் அவரது சக ஊழியர் மிஸி (Mizi) ஆகியோர் இச்சம்பவத்தைக் கண்டறிந்து, கூர்மையான பொருட்களைச் சாலையிலிருந்து அகற்றும் வீடியோவை ‘Threads’ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
“அதிகாலை 5.30 மணிக்கு ரோந்து சென்றபோது சாலையில் ஏதோ ஜொலிப்பதைக் கண்டோம். உடனே நானும் மிஸியும் இணைந்து அவற்றை அள்ளிச் சாலை ஓரத்தில் வீசினோம். அந்த நேரத்தில் வேலைக்குச் செல்லும் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன,” என்று அந்த அதிகாரி பதிவிட்டுள்ளார்.
சாலையில் வேண்டுமென்றே ஆணிகளைத் தூவிச் சென்ற நபர்களைக் கடுமையாகச் சாடிய அந்த அதிகாரி, இது போன்ற கொடூரச் செயல்கள் டயர்களைப் பழுதாக்குவதுடன், கடுமையான சாலை விபத்துகளுக்கும் வழிவகுக்கும் என்றும், இவ்வாறான நாசவேலைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த ஹஃபிஸுடின் கஸாலி என்ற இணையவாசி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை 3 மணியளவில் அதே இடத்தில் இருண்ட சிவப்பு நிற ‘பெரோடுவா மைவி’ (Perodua Myvi) காரில் 3 நபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சதிச்செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகக் காவல்துறையிடம் வழங்கி உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





















