முஸ்லிம் அல்லாதவர்களை தரம் தாழ்த்துவதை பாஸ் கட்சி முதலில் நிறுத்த வேண்டும் என்கிறார் லிம் குவான் எங்

பெட்டாலிங் ஜெயா, செப்.29 :

முஸ்லிம் அல்லாதவர்களை தரம் தாழ்த்துவதை பாஸ் கட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின், ஒரு செய்தி இணையதளத்திற்கு அளித்த அறிக்கையில் தமது கட்சியின் ஒற்றுமை நிகழ்ச்சி நிரலுடன் உடன்படும் பட்சத்தில், முஸ்லிம் அல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஸ் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் “முஸ்லிம் அல்லாதவர்களும் மலேசிய குடிமக்கள் என்பதை பாஸ் நினைவில் கொள்ள வேண்டும், அவர்கள் பாஸின் அரசியல் எதிரிகள் அல்ல, மாறாக அவர்களை தனது அரசியல் எதிரிகளாக பாஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது.

“மேலும் முஸ்லிம் அல்லாதவர்கள் தரம் தாழ்த்தப்படக்கூடாது, மாறாக தேசத்தை ஒன்றிணைக்க முயலும் எந்தவொரு பொறுப்பான அரசியல் கட்சியும் நாட்டிலுள்ள சகல இன மற்றும் மத ஒற்றுமையை உள்ளடக்கி, அவற்றின் இயல்புடன் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று லிம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டுள்ள பல கருத்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் மீதான வெளிப்படையான விரோதம் மற்றும் அவமதிப்பை சித்தரிப்பதாக உள்ளதாக லிம் கூறினார்.

“அனைத்து ஊழலுக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் மற்றும் பூமி அல்லாதவர்கள் தான் காரணம் என்றும், முஸ்லீம் அல்லாதவர்கள் மூத்த அமைச்சரவை பதவிகளை வகிக்க முடியாது என்றும், முஸ்லீம் அல்லாதவர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை அச்சுறுத்துவதாகவும் பாஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.

மேலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பவர்களை காலனித்துவ மனநிலை கொண்டவர்கள் என்றும் அவர் முத்திரை குத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here