மாநிலத்தின் கட்சிதாவல் தடை சட்டத்தை இயற்றுவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்த பிறகு, பெர்லிஸ் அதன் சட்டமன்றத்தை கலைக்கும் என்று மந்திரி பெசார் அஸ்லான் மேன் கூறுகிறார். கட்சிதாவல் தடை சட்டத்திற்காக கூட்டாட்சி அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப, மாநில அரசியலமைப்பை திருத்துவதற்கான மசோதா வியாழக்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அஸ்லான் கூறினார்.
(அதன்பிறகு) 15ஆவது பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு, மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான பொருத்தமான தேதியை பெர்லிஸ் ராஜாவிடம் முன்வைப்பேன் என்று ஹரியான் மெட்ரோ தெரிவித்திருக்கிறது.
பிந்தோங்கின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அஸ்லான், வரும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிதாவல் தடை சட்டம் பொருந்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஃபெடரல் கட்சிதாவல் தடை சட்டம் ஆகஸ்ட் 31 அன்று மன்னரின் ஒப்புதலைப் பெற்றது மற்றும் செப்டம்பர் 6 அன்று அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியாக வெளியிடப்பட்ட பின்னர் அக்டோபர் 5 முதல் நடைமுறைக்கு வந்தது.
சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவினால் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும். தங்கள் கட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அல்லது அவர்களது கட்சி கலைக்கப்பட்டாலோ அல்லது பதிவு நீக்கப்பட்டாலோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும். எவ்வாறாயினும், மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு பெறுவார்.







