கெடா சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் சுராயா யாக்கோப்

சுங்கை பட்டாணி, அக்டோபர் 13 :

கெடா பொதுப்பணி, எரிசக்தி, நீர் வழங்கல் மற்றும் வளங்கள் குழுத் தலைவராக பதவி வகித்து வந்த, கெடா சுங்கை தியாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சுராயா யாக்கோப், இன்று உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

“என்னை அப்பதவிக்கு நியமித்ததற்கு, கெடா சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பட்லிஷாவுக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

“கெடா மாநில அரசு, அனைத்து அரசு துறைகள் மற்றும் ஏஜென்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கெடா மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுராயா தெரிவித்துள்ளார்.

சுராயா 2004 ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பெந்தாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சுங்கை தியாங்கின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

கெடா மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூர் கூறுகையில், இன்று சுராயாவிடமிருந்து ராஜினாமா கடிதம் கிடைத்ததாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப விரைவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here