கோலாலம்பூர், அக்டோபர் 14 :
கடந்த அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பெட்டாலிங் ஜெயா நகர மையத்தில் உள்ள இரண்டு பட்ஜெட் விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஆடைகளைத் திருடுவதில் நிபுணத்துவம் பெற்ற கும்பலைச் சேர்ந்த 11 வெளிநாட்டவர்கள் உட்பட 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் கூறுகையில், துணிக்கடைகளில் அலாரம் அடிப்பதைத் தடுக்க குறித்த கும்பல் தங்கள் சொந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு பைகளைப் பயன்படுத்தியது என்றார்.
“திருடப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதற்காக கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும்.
திருடும்போது அவர்கள் குழுவாகவே செல்கின்றனர் என்றும் அவர்கள் தங்கள் தடங்களை மறைக்க ஒரு தங்கும் விடுதியிலிருந்து இருந்து மற்றொரு விடுதிக்குச் செல்வார்கள், ”என்று அவர் நேற்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த ஆண்டு கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி, 210 கிலோகிராம் ஆடைகள் அடங்கிய பொட்டலங்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிந்தது என்று போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டதாக முகமட் ஃபக்ருதீன் கூறினார்.
26 முதல் 47 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் 8 பெண்களும் அடங்கிய 11 வெளிநாட்டவர்களும் சுற்றுலாப் பயணிகளாக மலேசியாவிற்கு மூன்று முறை வந்துள்ளனர்.
“இந்தக் கும்பலின் உறுப்பினர்களை அவர்களின் இலக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநராக செயல்பட்ட 51 வயதான உள்ளூர் ஆடவரும் கைது செய்யப்பட்டார்.
“இந்த ஆண்டு மார்ச் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள 17 பல்பொருள் அங்காடிகளில் இந்தக் கும்பல் துணிகளைத் திருடுவது எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது, மேலும் கைது செய்யப்பட்டதன் மூலம், பெட்டாலிங் ஜெயாவில் ஏழு வழக்குகளைத் தீர்க்க முடிந்தது என்றார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அக்டோபர் 22-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.






