தொழிலதிபரை மிரட்டிய குற்றச்சாட்டிலிருந்து MyWatch முன்னாள் தலைவர் சஞ்சீவன் விடுவிக்கப்பட்டார்

புத்ராஜெயா, அக்டோபர் 27 :

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொழிலதிபரை மிரட்டிய குற்றச்சாட்டிலிருந்து, முன்னாள் மலேசிய குற்ற கண்காணிப்பு பணிக்குழு (MyWatch) தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவனை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.

டத்தோ அகமட் நஸ்பி யாசின், டத்தோ அகமட் ஜைதி இப்ராஹிம் மற்றும் டத்தோஸ்ரீ மரியானா யாஹ்யா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு, அவருக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, அவரது இறுதி மேல்முறையீட்டை அனுமதித்தது.

46 வயதான சான் லியோங் குவானிடம், அவர் தனது தொழிலை தொடர வேண்டும் எனில் பணம் தரவேண்டும் என மிரட்டி, அவரிடமிருந்து RM1,500 பறித்ததாகவும், ஜூலை 1, 2013 அன்று இரவு 9.45 மணிக்கு பகாங்கின் பெராவில் உள்ள ட்ரையாங் வணிக மையத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் 2018 ஆகஸ்ட் 14 அன்று, 38 வயதான சஞ்சீவனுக்கு தெமெர்லோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மூன்று மாத சிறைத் தண்டனையும் RM7,000 அபராதமும் விதித்தது.

அதனை எதிர்த்து நவம்பர் 27, 2020 அன்று தேமெர்லோ உயர்நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டை இழந்த பிறகு, அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில், குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஏழு சாட்சிகளை அரசுத் தரப்பு அழைக்கவில்லை. இதைக் கருத்தில் கொள்வதுடன் மேலும் சஞ்சீவனுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது என்றும் கூறிய நீதியரசர் அஹ்மட் நஸ்ஃபி அவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்தார்.

இதற்கிடையில், சஞ்சீவனுக்கு அதிக தண்டனை வழங்கக் கோரி அரசுத் தரப்பு செய்த குறுக்கு முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சஞ்சீவன் சார்பில் வழக்கறிஞர்கள் டத்தோ வி.சிதம்பரம், எஸ்.பிரேகாஸ் மற்றும் மிகுவல் செகுவேரா ஆகியோர் ஆஜராகினர், அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்கள் ஜக்கி அசிரப் ஜூபிர் மற்றும் ஐடா கைருலின் அஸ்லி ஆகியோர் ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here