ஜப்பானில் அனைத்துலக கடற்படை பயிற்சி: சிங்கப்பூர் உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

தோக்கியோ, நவம்பர் 7 :

இரண்டாம் உலக போரில் ஜப்பானின் தோல்வியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கடற்படையின் 70-வது ஆண்டு நினைவு தினம் தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்துலக கடற்படை பயிற்சிக்கு ஜப்பான் ஏற்பாடு செய்தது.

தலைநகர் தோக்கியோவுக்கு தெற்கே யோகோசுகாவில் உள்ள சுகாமி வளைகுடா பகுதியில் இந்த பயிற்சி நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன.

மேலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போர் விமானங்களையும் அனுப்பி உள்ளன.

சீனா இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் நடத்தும் இந்த சர்வதேச கடற்பயிற்சியில் தென்கொரியா முதல் முறையாக கலந்து கொண்டுள்ளது. போர்க்கால பாதிப்புகளால் மோசமாக இருந்து வந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட தொடங்கியிருப்பதை இது வெளிப்படுத்தி உள்ளது.

எனினும் இந்த பயிற்சியில் சீனா கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் யோகோகாமாவில் இன்றும், நாளையும் நடைபெறும் மேற்கு பசிபிக் பிராந்திய கடற்படை மாநாட்டில் சீனா கலந்து கொள்கிறது. இதில் சுமார் 30 நாடுகளை சேர்ந்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் கடற்பகுதியில் நேற்று தொடங்கிய கடற்படை பயிற்சியை பிரதமர் புமியோ கிஷிடா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் பகுதியில், குறிப்பாக ஜப்பானை சுற்றிலும் பாதுகாப்பு சூழல் மோசம் அடைந்து வருகிறது. அதிகரித்து வரும் வடகொரியாவின் ஏவுகணை வீச்சுகளும், ரஷியாவின் ஆக்கிரமிப்பு ஆசியாவில் ஏற்படுத்தி வரும் தாக்கமும் கவலை அளிக்கிறது. சர்ச்சைகளை விலக்கி பேச்சுவார்த்தைகளை நடத்துவது முக்கியம். ஆனால் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருப்பதும் அவசியம். இதற்காக ஜப்பானின் ராணுவ வலிமையை 5 ஆண்டுகளுக்குள் அதிகரிப்போம். எங்களிடம் வீணாக்குவதற்கு நேரம் இல்லை. அதிக போர்க்கப்பல்கள் கட்டுவதும், ஏவுகணை எதிர்ப்பு திறனை வலுப்படுத்துவதும், படைகளின் பணித்திறமையை மேம்படுத்துவதும் அவசர தேவை ஆகும்’, இவ்வாறு புமியோ கிஷிடா கூறினார்.

முன்னதாக ஜப்பானின் இசுமோ போர்க்கப்பலில் சென்று சர்வதேச நாடுகளின் போர்க்கப்பல்களின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here