நீலாய்:
இங்குள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (PLUS Expressway) 284.4-வது கிலோமீட்டர் பகுதியில், பழுதாகி நின்ற கார் மீது லோரி மோதிய கொடூர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாகப் பலியானார்.
மேலும் அவரது தங்கையும், அவர்களுக்கு உதவ வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 9.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நீலாய் மாவட்டக் காவல் துறை போக்குவரத்துப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மலாக்காவிலிருந்து பேராக்கிற்குப் பயணித்த 32 வயது பெண் ஓட்டி வந்த ‘பெரோடுவா அக்சியா’ (Perodua Axia) ரக கார், நெடுஞ்சாலையின் இடமிருந்து இரண்டாவது தடத்தில் எதிர்பாராதவிதமாகப் பழுதாகி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த 22 வயது இளைஞர், தனது ஹோண்டா RS 150 மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, பழுதான காரை ஓரத்திற்குக் தள்ளிச் செல்ல உதவ முயன்றுள்ளார்.
“அதே தடத்தில் பின்னால் வந்த 24 வயது இளைஞர் ஓட்டி வந்த லோரி, பாதையில் நின்றிருந்த காரையும், உதவ வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் கவனிக்கத் தவறியதாகத் தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, காரின் பின்புறத்திலும் அந்த இளைஞர் மீதும் பலமாக மோதியது.” என்று, நீலாய் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டெண்ட் ஜோஹாரி யாஹ்யா கூறினார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில், காரை ஓட்டி வந்த 32 வயது பெண் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.காரில் பயணித்த அவரது 39 வயது தங்கையும், உதவ வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் (Hospital Tuanku Jaafar) அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















