குடிபோதையில் மத போதகரை தாக்கிய நபர் கைது

ஜோகூர் பாரு, நவம்பர் 14 :

இங்குள்ள ஸ்கூடாய், தாமான் யுனிவேர்சிட்டிக்கு அருகிலுள்ள ஒரு சூராவில், குடிபோதையில் மத போதகர் ஒருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், ஃபரிஸ் அம்மார் அப்துல்லா கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இரவு 7.55 மணிக்கு தனது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்றார்.

38 வயதான அந்த சந்தேக நபர் சூராவுக்குள் சென்று, அங்கிருந்த மதபோதகரை இரண்டு கத்திகள் மற்றும் ஒரு மதுப் போத்தலைப் பயன்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

“சம்பவத்தின்போது குறித்த சந்தேக நபர் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவர் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சூராவில் மத பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், சம்பவத்தில் சந்தேகநபர் பயன்படுத்திய இரண்டு கத்திகள் மற்றும் மதுப் போத்தல் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் வேலையில்லாதவர் என்பதும், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் விசாரணைக்கு உதவும் வகையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சாட்சிகளின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here