இன்று காலை நிலவரப்படி, பேராக் மற்றும் சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 16 :

நாட்டில் பருவமழை ஆரம்பித்ததைத் தொடர்ந்து பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று காலை நிலவரப்படி, பேராக் மற்றும் சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜோகூர் மற்றும் கிளாந்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது மற்றும் மலாக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, பேராக்கில், 153 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 524 பேர் அங்குள்ள ஐந்து மாவட்டங்களில் திறக்கப்பட்ட எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது நேற்று இரவு 8 மணிக்கு 447 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.

சிலங்கூரில், சமூக நலத் துறையின் (JKM) இன் இணையதளத்தின் அடிப்படையில், நேற்றைய 184 பேர் (51 குடும்பங்கள்) உடன் ஒப்பிடும்போது, ​​இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேர் என அதிகரித்துள்ளது. அங்கு தற்போது ஐந்து வெள்ள நிவாரண மையங்கள் இயங்கி வருகிறன.

ஜோகூரில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 85 குடும்பங்களைச் சேர்ந்த 345 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிளாந்தானில், இன்று காலை 9 மணி நிலவரப்படி, 686 குடும்பங்களைச் சேர்ந்த 2,036 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் பாசிர் மாஸ் மாவட்டத்தில் எட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மலாக்காவில் நேற்று இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 8 மணி நிலவரப்படி, 15 குடும்பங்களை உள்ளடக்கிய 53 பேராக குறைந்துள்ளனர் என்று மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு தீவில், கனமழை காரணமாக மீண்டும் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, 42 பேர் தங்கும் வகையில் பூரி தேச வெள்ள மண்டபத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஒரு வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டது என்று பினாங்கு சுற்றுச்சூழல் மற்றும் நலன்புரி குழுவின் தலைவர் Phee Boon Poh கூறினார்.

கெடாவில், கூலிம் மற்றும் பண்டார் பாஹாரு மாவட்டங்களிலுள்ள இரண்டு வெள்ள நிவாரண மையங்களில் இன்னும் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் வெள்ளத்தால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here