சுபாங், நவம்பர் 28 :
இன்று மலேசியாவுக்கான தனது சிறப்புப் பயணத்தை மேற்கொண்டுள்ள புரூணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா செலுத்திய காரில் அமர்ந்தவாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புத்ராஜெயாவிலுள்ள ஸ்ரீ பெர்டானாவுக்கு சென்றது ஊடகங்களுக்கு சும்மா மெல்லும் வாயில் அவல் போட்டது போல ஆகிவிட்டிருந்தது.
முன்னதாக, காலை 11.45 மணியளவில், லிமோசினின் முன்பக்க பயணி இருக்கையில் அமர்ந்திருந்த அன்வார் ஊடக பயிற்சியாளர்களை நோக்கி கை அசைப்பதைக் காண முடிந்தது.
அந்த வாகனத்தில் ல்தானின் மகன் பெங்கீரன் முடா அப்துல் மதீன் போல்கியாவும் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர், சுபாங்கில் உள்ள அரச மலேசிய ஆகாயப் படை தளத்தில் இருந்து புரூணை தூதரகம் ஏற்பாடு செய்திருந்த பிஎம்டபிள்யூ ரகக் காரில் அமர்ந்து அவ்விரு தலைவர்களும் பாதுகாப்பு படையினருடன் புத்ராஜெயாவிற்கு பயணம் செய்தனர்.
முன்னதாக, தியூடிஎம் விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக வந்தடைந்த சுல்தான் ஹசானால் மற்றும் அவரின் பேராளர்கள் குழுவினரை காலை 11.40 மணிக்கு அன்வாரும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ முஹமட் சுக்கி அலியும் வரவேற்றனர்.
மேஜர் முஹமட் ஃபௌட்சி சே ஹஷிம் தலைமையிலான அரச மலேசிய தரைப் படை, சுல்தான் ஹசானாலுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
நவம்பர் 24-ஆம் தேதி, நாட்டின் 10-வது பிரதமராக பதவியேற்றிருக்கும் டத்தோஸ்ரீ அன்வாரை சந்திப்பதற்காக சுல்தான் ஹசானால் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.
மலேசியாவும்புரூணையும் பொதுவான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மற்றும் மக்களின் உறவுகள் மூலம் நீண்ட மற்றும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளன.
இந்த சிறப்பு உறவின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய சாத்தியங்களை ஆராயும் அதே வேளையில், தற்போதைய ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இரு தலைவர்களும் பயன்படுத்துவார்கள்.
2021 ஆம் ஆண்டில், புருனே மலேசியாவின் 30வது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், RM8.03 பில்லியன் (US$1.94 பில்லியன்) மதிப்புடைய மொத்த வர்த்தகத்துடன் ஆசியானில் ஆறாவது பெரிய நாடாகவும் இருந்தது நினைவுகூரத்தக்கது.









