22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது.
தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் கையே ஓங்கியது. அட்டகாசமான தற்காப்பு வளையத்தை உருவாக்கி எதிராளிகளிடம் பந்து அதிகம் செல்லாதவாறு பார்த்துக் கொண்ட அர்ஜென்டினா அணியினர் அடிக்கடி பிரான்சின் கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்தனர். 23ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோல் அடித்தது. பந்துடன் கோல் ஏரியாவுக்குள் ஊடுருவிய அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவை பிரான்சின் டெம்பெலே கையால் இடித்து தள்ளியதால் அர்ஜென்டினாவுக்கு நடுவர் உடனடியாக பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி பதற்றமின்றி லாவகமாக கோல் அடித்தார்.
36ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா, பிரான்சின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி மேலும் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் மாக் அலிஸ்டர் தட்டிக்கொடுத்த பந்தை ஏஞ்சல் டி மரியா வலைக்குள் செலுத்தினார். கோல் அடித்த பூரிப்பில் அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வலுவான முன்னிலையை தொட்டது.
வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் 108ஆவது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக இருக்கலாம் என்ற நினைப்பை மீண்டும் எம்பாப்பே தகர்த்தார். 118ஆவது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அர்ஜென்டினா வீரர் மோன்டியல் பந்தை கையால் தடுத்ததால் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே கோல் போட்டார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் என்ற மகத்தான சாதனையையும் 23 வயதான எம்பாப்பே படைத்தார்.
பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3ஆவது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. மெஸ்சியின் கனவு நனவானது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் ஏக்கமும் தணிந்தது. அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடர் என்பது நினைவு கூரத்தக்கது.