மலாக்கா, பத்து பெரெண்டாமில் உள்ள 24 மணி நேர கடை ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு நபரையும் அவரது 12 வயது மாற்றுத்திறனாளி மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும், சிறுவன் ஊனமுற்றவராக இருந்ததால் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டான் என்று மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் கிறிஸ்தோபர் பாடிட் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 23 அன்று நண்பகல் 1.30 மணியளவில் குறித்த கடையில் கொள்ளையடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, 32 வயதுடைய நபர் மற்றும் அவரது மகனும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
அந்த நபர் மாற்றுத்திறனாளியான தனது மகனை, இங்குள்ள பத்து பெரெண்டாம், தாமான் சுதேராவில் உள்ள கடைக்கு பொருட்களை வாங்குவதாக கூறி அழைத்து வந்துள்ளார். “பின்னர் அந்த நபர் ஒரு கத்தியைக் காட்டி பணம் செலுத்தும் கவுண்டரிலிருந்த காசாளரை மிரட்டி, RM197 ரொக்கம் மற்றும் மூன்று சிகரெட் பெட்டிகளை கைப்பற்றினார்,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து RM187 பணமும், சிகரெட் பெட்டியும் கைப்பற்றப்பட்டதாக ஏசிபி கிறிஸ்தோபர் கூறினார்.
கும்பல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 மற்றும் பிரிவு 397 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபர் டிசம்பர் 28 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு குற்றம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக முந்தைய மூன்று குற்றப் பதிவுகள் இருந்தன என்றும் கூறினார் .