குடிபோதையில் வாகனம் ஓட்டியது நண்பனின் மரணத்தில் முடிந்தது

கூச்சிங்:

தாமான் BDCக்கு செல்லும் சுற்றுவட்டப் பாதையின் அருகே, ஜாலான் ஸ்துதோங்கில் இன்று அதிகாலையில் கார் மரத்தில் மோதியதில், வாலிபர் ஒருவர் மரணமடைந்தார்.

அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

20 முதல் 22 வயதுடைய மூன்று பேர் சென்ற பெரோடுவா கெனாரி வகை கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக, கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர், மெர்பின் லிசா தெரிவித்தார்.

“சம்பந்தப்பட்ட காரை ஓட்டிச் சென்றவர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று, இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் நாளை சரவாக் பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்றும், மது போதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 44 இன் படி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் மெர்பின் கூறினார்.

“இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் RM50,000 அபராதம் விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here