கோத்தா கினாபாலு:
இன்று (டிச. 31) தீப்பிடித்து எரிந்த வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்து, தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, துணை இயக்குநர் மிஸ்ரான் பிசாரா தெரிவித்தார்.
கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அஸ்ரின் அமீன், 43, என்கிற தீயணைப்பு வீரர், இன்று நண்பகல் 2.40 மணியளவில், இங்கு அருகிலுள்ள சன்னி கார்டனில் எரியும் நான்கு வீடுகளில் ஒன்றின் கூரையிலிருந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் தவறி கீழே விழுந்ததாகவும், ஆனால் அதிஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மிஸ்ரான் கூறினார்.
காயமடைந்த பின்னர், மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அஸ்மின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிற்பகல் 2.36 மணியளவில் தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் குறித்த குடியிருப்பு பகுதிக்கு விரைந்ததாகவும் , இந்த தீ விபத்தில் நான்கு வீடுகள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் மிஸ்ரான் கூறினார்.
பிற்பகல் 3.02 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 4.36 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.