White Harrier Gang போலீசாரால் முறியடிப்பு: 4 பேர் கைது

செர்டாங்: கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஶ்ரீ கெம்பாங்கன் மற்றும் ஸ்தாப்பாக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்ததன் மூலம், White Harrier Gang எனப்படும் வாகனத் திருட்டுக் கும்பலை போலீசார் முறியடித்தனர்.

செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி.   ஏ.அன்பழகன் கூறுகையில், 41 முதல் 59 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் அதே நாளில் சிலாங்கூர், பூச்சோங், ஜாலான் பண்டார் கின்ராரா 3/1, சாலையோரத்தில் ஒரு வாகனத் திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள கார்கள் மற்றும் வேன்களைப் பயன்படுத்தி பழங்களை விற்பனை செய்வதை போல் நடமாடி லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி), மாஸ் ரேபிட் டிரான்சிட் (எம்ஆர்டி) நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைத் திருடுவது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த கும்பல் சந்தேக நபர்களில் ஒருவருக்கு சொந்தமான வெள்ளை டொயோட்டா ஹாரியர் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனத்தை (SUV) பயன்படுத்தி, நம்பகமான வாங்குபவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு வகையான கார்களை குறிவைத்து காலையில் வாகன திருட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று அவர் இன்று செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் விசாரணையில், ஒவ்வொரு சந்தேக நபரும் திருடப்பட்ட ஒவ்வொரு காருக்கும் RM1,500 முதல் RM2,000 வரை சம்பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

செர்டாங், காஜாங், பிரிக்ஃபீல்ட்ஸ், செராஸ், சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் இந்த ஆண்டு பதிவான 15 வாகனத் திருட்டு வழக்குகளில் சந்தேகநபர்கள் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களில் 3 பேர் வாகனத் திருட்டு மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான பல்வேறு குற்றப் பதிவுகள் உள்ளவர்கள் என்றும் அன்பழகன் கூறினார்.

இந்த வழக்கின் மூளையாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரை போலீசார் இப்போது தேடி வருகின்றனர். சந்தேக நபர்களில் ஒருவருடன் குடும்பத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here