கிராமத்திற்கு பணம் அனுப்பிய மனைவியை கோபத்தில் கொலை செய்ததாக கணவர் கைது

செர்டாங்:

கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி, பண்டார் கின்ராரா, தாமான் டாமாய் உத்தாமாவில் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேக நபராக கருதப்படும் ஒரு இந்தோனேசிய ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக, செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் தெரிவித்தார்.

நேற்று நண்பகல் 12.30 மணியளவில் பேராக்கின் பத்து காஜாவில் உள்ள ஒரு வீட்டில் 27 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் என்றும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருமணம் செய்துகொண்டார் என்றும் அவருக்கு 1 முதல் 5 வயதுடைய நான்கு குழந்தைகள் உள்ளனர் என்றுமவர் கூறினார்.

“டிசம்பர் 16 அன்று நடந்த சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவரை ஸ்பேனரால் தாக்கியதை சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, சந்தேக நபருக்குத் தெரியாமல் அவரது மனைவி RM6,000 பணத்தை எடுத்து கிராமத்திற்கு அனுப்பியதே சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான சண்டைக்கான காரணமாகும்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின்படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here