கோலாலம்பூர்:
கெப்போங் பகுதியில் உள்ள சுங்கை கெரு (Sungai Keruh) ஆற்றில் விழுந்து மாயமான நபரைத் தேடும் பணி மூன்று நாட்களுக்குப் பிறகு சோகத்தில் முடிந்தது. அந்த நபரின் உடல் நேற்று தாமான் ஸ்ரீ சிகாம்புட் (Taman Sri Segambut) பகுதியில் உள்ள ஒரு நீர் தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை மாலை 5:27 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே செந்தூல் பகுதியைச் சேர்ந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (SAR) இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.
சுங்கை கெரு, சுங்கை கொம்பாக் மற்றும் சுங்கை கிள்ளான் ஆகிய பகுதிகளில் சுமார் 16 கிலோமீட்டர் சுற்றளவிற்குத் தேடுதல் மற்றும் மீட்பு பணி நடத்தப்பட்டது.
இருப்பினும் தேடுதல் பணியின் மூன்றாவது நாளான நேற்று, தாமான் ஸ்ரீ சிகாம்புட்டில் உள்ள அல்-குர்துபி மசூதிக்கு அருகிலுள்ள நீர் தேக்கக் குளத்தில் உடல் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் அவர் விழுந்ததாகக் கருதப்படும் கெப்போங், ஜாலான் குவாங் புளான் (Jalan Kuang Bulan) பகுதியிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட நபரின் அடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தற்போது உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணியில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் (DBKL) மீட்புக் குழுவினர் இணைந்து செயல்பட்டனர்.




















