சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோவிட்-19 தொற்றுநோய் சம்பவங்களில் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டால், முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது என்று, மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.
இது ஒரு ஆரம்ப தடுப்பு நடவடிக்கை என்று கூறிய அவர், மாநிலத்தில் இன்னும் கோவிட் -19 தொற்று சம்பவங்கள் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் கூறினார்.
“அரசாங்க அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்படலாம். இருப்பினும் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தால் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இம்மாதம் 14-ஆம் தேதி கோலப் பிலாவில் உள்ள இஸ்தானா ஶ்ரீ மெனாந்தியில் மாநில யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவாரின் 75-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.
அந்த நிகழ்வின்போது அவசியம் சுவாசக் கவசம் அணிய வேண்டியதை மாநில அரசாங்கம் கட்டாயமாக்கும் என்று அமினுடின் கூறினார்.
பெரிய அளவில் மக்கள் கூடவிருக்கும் அந்த வைபவத்தின்போது பொதுமக்கள் சுவாசக் கவசங்களை அணிவதை ஊக்குவிக்குமாறு துவாங்கு முஹ்ரிஸ்சும் பரிந்துரைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.