தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்- சீனா ஆத்திரம்

சீனா:

உள்நாட்டு போருக்கு பின்னர் சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக கருதுகிறது. ஆனால் சீனா அப்படி நினைக்கவில்லை. தைவான் இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என சீனா கூறி வருகிறது. தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது.

இதற்கிடையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் அமெரிக்கா தைவானுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது தைவானை சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது.

இந்த சூழலில் தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் கையெழுத்திட்டார். இதில் ஆத்திரமடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து ஒரு வார காலம் தீவிர போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் தைவான்-சீனா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த நிலையில், சீனாவையும், தைவானையும் பிரிக்கும், தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல் நேற்று சென்றது.

இது தொடர்பாக அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்துல கடற்பகுதியில் சுதந்திரமான வழி செலுத்தலை நிரூபிக்கும் விதமாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய ‘யு.எஸ்.எஸ். சுங்-ஹூன்’ என்ற போர்க்கப்பல் தைவான் ஜலசந்தி வழியாக சென்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், “இந்த பயணம் மோதலை தூண்டும் செயல், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது” என சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here