வெளிநாட்டுத் தொழிலாளர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணங்களில் ஒன்று தங்குமிட பிரச்சினை என்கிறார் மனிதவள அமைச்சர்

புத்ராஜெயா:

முறையான தங்குமிட வசதி வழங்காதது மற்றும் முதலாளிகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பது போன்றவையே வெளிநாட்டுத் தொழிலாளர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்குக் காரணம், என மனிதவளத் துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.

கடந்தாண்டு பெறப்பட்ட மொத்தம் 16 லட்சம் விண்ணப்பங்களில், 43 விழுக்காடு அல்லது 6 இலட்சத்து 76,070 விண்ணப்பங்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதாக, மனிதவள அமைச்சர் கூறினார்.

“நிச்சயமாக, இதற்குப் பின்னால் காரணங்கள் உள்ளன. நாங்கள் விண்ணப்பங்களை வெறுமனே நிராகரிக்கவில்லை. மனிதவள அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் ஒழுங்குமுறை முகமைகளால் அமைக்கப்பட்டுள்ள பல நிபந்தனைகள், மதிப்பீடுகள் உள்ளன, அவை எந்தவொரு விண்ணப்பத்தையும் அங்கீகரிக்கும் முன் நாம் ஆராய வேண்டும்.

“முதலாளிகள் சரியான தங்குமிடத்தை வழங்காதபோது நாங்கள் வெறுமனே தொழிலாளர்களை அழைத்து வர முடியாது. இதன் விளைவுகள் நாட்டுக்கு மிகவும் மோசமானதாகவே முடியும்”.

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத முதலாளிமார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் மற்றும் நாட்டின் நற்பெயரைப் பாதிக்கலாம் என்றும் சிவகுமார் குறிப்பிட்டார்.

தற்போது, நாட்டில் சுமார் 14 இலட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 19 இலட்சமாக உயரும் என்றும் சிவகுமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here