நபர் ஒருவரை பழிவாங்குவதற்காக அவரின் கார் டயர்களை பஞ்சர் செய்து, விளக்குகளை உடைத்த தம்பதியினர் கைது

கோலாலம்பூரின் பண்டான் இண்டாவில் உள்ள தாமான் லெம்பா மாஜூ என்ற இடத்தில், பழிவாங்கும் எண்ணத்துடன் ஒருவரின் கார் டயர்களை பஞ்சர் செய்து, காரின் விளக்குகளை உடைத்தது தொடர்பில் ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.

45 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும், நேற்றிரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் ஃபாரூக் எஷாக் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஸ்க்ரூடிரைவர், கார் சாவி உள்ளிட்ட பல பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது Mercedes Benz-A200 காரில் கீறல் விழுந்திருந்ததையும், நான்கு டயர்களும் பஞ்சராகி, காரின் விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் ஜனவரி 15-ம் தேதி காலையில் பார்த்ததாக முகமட் ஃபாரூக் கூறினார்.

“புகார்தாரரால் திட்டப்பட்டதால் சந்தேக நபர்கள் அதிருப்தி அடைந்து, அவரை பழிவாங்கும் முகமாக காரை சேதப்படுத்தியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

குறித்த தம்பதியினர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427 இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு வரும் வியாழக்கிழமை (ஜனவரி 26) வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here