கணவரின் RM520,000 பணத்தை திருடிய குற்றச்சாட்டில் மனைவி கைது

கடந்த புதன் கிழமை பத்து பெரெண்டாமில் உள்ள தாமான் மெர்டேக்காவில் நடந்த சோதனையில், தனது கணவரின் RM520,000 பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டின் இரண்டு பெட்டகங்களில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை எனக் கூறி அவரது கணவர் போலீஸில் புகாரளித்ததைத் தொடர்ந்து, 35 வயதான அவரின் மனைவி கைது செய்யப்பட்டதாக, மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

“ஜனவரி 4 அன்று, மாலை 6.30 மணியளவில் 37 வயதான புகார்தாரர் கோலாலம்பூரில் இருந்து பெர்மாடாங் பாசீரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி, அவரது வீட்டிலிருந்த பணப் பாதுகாப்பு பெட்டிகளைச் சரிபார்த்தபோது தனது பணம் காணாமல் போனதைக் கண்டறிந்தார்.

“இரண்டு பெட்டகங்களில் உள்ள பணத்தின் அளவு ஏறக்குறைய RM520,000 ஆகும், மேலும் பெட்டகங்களில் வேறு பணமும் இருந்தது என்றும் அதன் தொகையைக் கண்டறிய முடியாதுள்ளது என்றும், அத்துடன் புகார்தாரரின் தாயாருக்குச் சொந்தமான நகைகளும் இருந்தன” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புகார்தாரர் உரிமம் பெற்ற பணக்கடன் வழங்கும் வணிகத்தை நடத்துபவர் என்றும், பணம் வைத்திருந்த பெட்டகங்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும், அந்தப் பணத்தை திருடியதாக புகார்தாரர் தனது மனைவியை சந்தேகித்ததாகவும் கூறினார்.

சந்தேக நபர் ஜனவரி 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கிறிஸ்டோபர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here