வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக உணவகம் ஒன்றிற்கு RM200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோத்தா கினபாலுவின் Foh Sang என்னும் இடத்திலுள்ள ஓர் உணவகத்தில், வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணம் விதிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களை போல பாசாங்கு செய்து, குறித்த உணவகம் அதிக பணம் வசூலித்ததை கண்டறிந்ததாக, அதன் சபா அலுவலக இயக்குனர், ஜார்ஜி அபாஸ் கூறினார்.
குறித்த உணவகத்தில் “உணவக நடத்துனர் முழு விலைப் பலகையை வைக்கவில்லை என்பதையும், உணவுப் பொருட்களில் சேர்க்க விரும்பினால் கூடுதல் கட்டணங்கள் உள்ளதா என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதையும் தாம் கண்டறிந்ததாகவும், மேலும் “இந்த உணவகம் விற்ற இரண்டு வகையான டின்களில் அடைக்கப்பட்ட பானங்களின் விலையைக் குறிப்பிடத் தவறிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதன்காரணமாக அந்த இடத்திலேயே RM200 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலையை வழங்கத் தவறியதற்காக, உணவாக நடத்துனர் மீது விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் அவர் தெரிவித்தார்.
மேலும் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலைகளை புதுப்பிக்கவும் தெளிவாகக் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
உணவாக நடத்துனர்கள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய அமைச்சகம் உணவகங்களை அவ்வப்போது கண்காணிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.









