கோழி வளர்ப்பவர்கள், முட்டை உற்பத்தியாளர்களுக்கான மானியம் தொடர்பில் அரசு மறு ஆய்வு செய்யும்

கோழி வளர்ப்போர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு மானியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரும் ஜூன் மாதத்தில் அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று டத்தோ ஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

இதுவரை, அவர்களுக்கான உதவித் தொகைக்கு RM180 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் அது RM200 கோடிக்கு அதிகமாக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சரான அவர் கூறினார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை மீண்டும் நிலையாக இருப்பதை உறுதிசெய்ய, அதற்கான உதவித் தொகையை தொடர்வதா அல்லது வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துவதா என்பது குறித்து, வரும் ஜூன் மாதத்தில் தமது அமைச்சு ஆராயவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

அதேவேளையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருப்பதை உறுதிச்செய்ய, அவற்றை விரிவாக சோதனை செய்யுமாறு கால்நடை மருத்துவ சேவைத் துறை, JPV-ஐ தமது தரப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சேதமடையாமல் இருப்பதை உறுதிச்செய்ய விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு அதை பரிசோதிக்க வேண்டும் என்று நேற்று மலேசிய பயனீட்டாளர் சம்மேளனத்தின் (FOMCA) துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here