மலேசியப் பெண்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாட்டவர்களை திருமணம் செய்து கொண்ட மலேசியப் பெண்களுக்கு, வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு மலேசியக் குடியுரிமை வழங்குவதற்கு, கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அசாலினா உத்மான் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

திருத்தங்கள் பகுதி ஒன்றின், பிரிவு 1(1)(d) மற்றும் பிரிவு 1(1) (e)-ஐயும் இரண்டாம் அட்டவணையின், பிரிவு இரண்டின் பிரிவு 1 (b) மற்றும் பிரிவு 1(c)-யும் இந்த அரசியலமைப்பு திருத்தம் உள்ளடக்கி இருக்கிறது என்று அவர்கள் கூறினார்.

இது சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்தப் பின்னர், 2023ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட இந்த அரசியலமைப்பு சட்ட மசோதா, நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியுரிமை தொடர்பான ஏனைய திருத்தங்கள் குறிப்பாக பிரிவு மூன்று குறித்து, உள்துறை அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட செயற்குழு அதனை விரிவாக ஆராய்ந்தப் பின்னர் அமைச்சரவையில் தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

“இந்த முடிவின் விளைவு என்னவென்றால், மலேசியா தினத்திற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரில் ஒருவர் மலேசியராக இருந்தால், கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 14 இன் ஷரத்து (1) இன் செயல்பாட்டின் மூலம் குடியுரிமை பெற உரிமை உண்டு” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பாலுறவு சமத்துவம் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மதிக்கும் நாட்டின் உறுதிப்பாட்டை உணர்ந்ததற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு மற்றும் கேடிஎன் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here