10 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமே KLIA தானியங்கி நுழைவாயில்களை பயன்படுத்த அனுமதி- உள்துறை அமைச்சர்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) தானியங்கி நுழைவாயில் வசதிகளை தற்போது 10 நாடுகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த வசதியைப் பயன்படுத்த அதிக நாடுகளை அனுமதிப்பதன் அவசியம் தொடர்பில், அடுத்தடுத்த மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று (பிப்ரவரி 27) KLIA இல் வெளிநாட்டினர் வருகைக்கான மலேசியாவின் தானியங்கி நுழைவாயிலை திறந்து வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வசதியை அனுபவிக்கும் நாடுகளாக தற்போது ஆஸ்திரேலியா, புருனே, ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், சவுதி அரேபியா, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய 10 நாடுகள் அடங்கும்.

இந்த நாடுகளுக்கு இப்புதிய இலகுவான வசதிகளை செயற்படுத்துவதன் மூலம், நாட்டிற்குள் நுழையும் மொத்த வெளிநாட்டுப் பார்வையாளர்களில் 885,000 பேர் அல்லது 27.1 விழுக்காட்டினர் பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாக சைபுடின் மேலும் கூறினார்.

குறித்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், தங்கள் ஆவணங்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், அத்தோடு மலேசியா வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் இணையம் மூலமான மலேசிய இயக்கவியல் வருகை அட்டையை (MDAC) பூர்த்தி செய்ய வேண்டும் அத்தோடு முதல் முறை வருகை தருபவர்கள், பயணிகள் குடிநுழைவுக் கவுண்டரில் தங்கள் பயோமெட்ரிக் தகவலை சரிபார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, KLIA இல் நெரிசலைக் குறைக்க, குறைந்த ஆபத்துள்ள 10 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கான தானியங்கி நுழைவாயில்கள் கொண்ட வசதிகளை அரசாங்கம் தொடரும் என்று சைபுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here