வெள்ளம்: 5 மாநிலங்களில் உள்ள நிவாரண மையங்களில் 36,000க்கும் அதிகமானோர் தஞ்சம் – மூவர் பலி

நாட்டின் நான்கு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஜோகூரில் மட்டும் இன்று காலை நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 33,000 ஐ தாண்டியது.

ஜோகூரில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,486 பேராக இருந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 33,149 ஆக உயர்ந்துள்ளது. ஜோகூரில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது என்றும், அங்கு 217 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜோகூரில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங்கில், நேற்றிரவு 27 நிவாரண மையங்களில் 1,769 பேர் இருந்த நிலையில், இன்று காலை 30 நிவாரண மையங்களில் 2,031 பேராக அதிகரித்துள்ளது என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் நெகிரி செம்பிலானில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,061 பேர் அங்குள்ள 12 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர் லெப்டினன்ட் கேணல் (PA) முஹமட் நஸ்ரி மெஸ் காம் கூறினார்.

மலாக்காவில், நேற்று இரவு 8 மணியளவில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு 35 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேராக அதிகரித்துள்ளது என்று, மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

இவை தவிர சரவாக்கில், வெள்ளத்தால் வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேராக உள்ளது என்றும், அங்கு இரண்டு நிவாரண மையங்கள் செயற்பட்டுவருவதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here