கோலாலம்பூர்:
கெடா, பண்டார் பாரு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த இரண்டு மணி நேரக் கனமழையைத் தொடர்ந்து, நான்கு துணை மாவட்டங்களில் உள்ள 17 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்துப் பண்டார் பாரு மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் அப்துல் ரஹிம் கைருடின் விடுத்துள்ள அறிக்கையில், சுங்கை பத்து, செலாமா, பாகான் சமாக் மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வீடுகளில் குறிப்பாகச் சுங்கை தெங்காஸ் கிராமத்தைச் சேர்ந்த ஏழு குடும்பத்தினர் அங்குள்ள கெடா சமூக மண்டபத் தற்காலிகப் பேரிடர் மையத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சுங்கை தெங்காஸ் ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வரும் வேளையில், சுங்கை தெருன்சிங் மற்றும் சுங்கை தெராப் டாலாம் ஆகிய ஆறுகளும் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன.
நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.





















