மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கும் எனக்கும் தொடர்பில்லை என்கிறார் பிரதமர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் எந்த விசாரணையிலும் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

“MACC-யின் விசாரணைகள் மற்றும் கைதுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டால், ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் யாரையும் விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியாது என்று அர்த்தமா? அவ்வாறு என்றால், அனைத்து பெரிய ஊழல் வழக்குகளும் கவனிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமா?” என்று இன்று வியாழக்கிழமை (மார்ச் 9) கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் ஆதரவாளர்கள் பலர் பிரதமரை குறை கூறுவது தொடர்பில் கூறிய கூற்றுகள் குறித்து கேட்டதற்கு, MACC-யின் நடவடிக்கையில், அல்லது எந்த வழக்குகளிலும் தான் தலையிடவில்லை, இதில் எந்த அரசியல் நோக்கமோ அல்லது தலையீடோ இல்லை” என்று அன்வார் கூறினார்.

“இந்த நாடு தூய்மையாகவும், ஊழலற்றதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் எவரும் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பார்க்க வேண்டும், அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டிருந்தாலும் அவற்றை உண்மைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என்று பிரதமர் கூறினார்.

“ஜன விபாவா விஷயம் நிதி அமைச்சகத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது, மாறாக இதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமோ அல்லது சட்டத்துறையோ அழுத்தம் கொடுக்கவோ, தலையிடவோ இல்லை,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here