காவல்துறையை அவமதிக்கும் சமயப் போதகரின் வீடியோ பழையது; புக்கிட் அமான்

கோலாலம்பூர்: போலீஸ் படைக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்ட சமய போதகர் சம்பந்தப்பட்ட வைரலான வீடியோ பழைய கிளிப் என்பதை காவல்துறை  (PDRM) உறுதி செய்துள்ளது.

55 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றாததற்காக, வேகப் பொறி மற்றும் சாலைத் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை சமயப் போதகர் முட்டாள் என்று அழைப்பது இடம்பெற்றுள்ளது.

PDRM நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் ஏசிபி ஏ.ஸ்கந்தகுரு கூறுகையில், இந்த வீடியோ 2016ல் பதிவு செய்யப்பட்டது என்பது சோதனையில் கண்டறியப்பட்டதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, ஆகஸ்ட் 26, 2016 அன்று பினாங்கில் உள்ள பாராட் டயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500 இன் கீழ் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது, மேலும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவருக்கு RM7,000 அபராதம் விதிக்கப்பட்டது.

எந்தவொரு அறிக்கையையும் வெளியிடும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அவதூறு கருத்துக்களைப் பேசுவதைத் தவிர்க்கவும் பொதுமக்கள் நினைவூட்டப்படுகிறார்கள் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், சமூக ஊடகங்களில் வீடியோ கிளிப்பைப் பரப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here