வாரிசான் கட்சி (Warisan) அடுத்த சபா மாநிலத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளாது என்றும், வலுவான கூட்டணியை உருவாக்க பொருத்தமான கட்சிகளை இப்போது முதல் மதிப்பீடு செய்து வருவதாகவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்படும் கட்சிப் பங்காளிகள் சபா மக்களுக்காக ஒரே கொள்கையுடனான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதையும், இந்த ஒத்துழைப்பு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதையும் உறுதிப்படுத்த வாரிசான் விரிவான மதிப்பீட்டை மேற்கொண்டு வருவதாக செம்போர்னா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
2020 இல் நடந்த 16வது சபா மாநிலத் தேர்தலில், வாரிசான்- PH உடன் இணைந்து, சபா மாநில சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 73 இடங்களில் 32 இடங்களை வென்றது, அதே நேரத்தில் தற்போதைய மாநில அரசாங்கத்தின் பதவிக்காலம் 2025 இல் முடிவடையும் என்பதால், மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், கட்சியை வலுப்படுத்துவது வாரிசானுக்கு இப்போது முக்கியமானது என்று முகமட் ஷஃபி கூறினார்.
“பக்காத்தான் ஹராப்பான் (PH) உடன் நாங்கள் ஏற்கனவே தேசிய அளவில் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ளதால், அதன் ஒத்துழைப்பை பெற்றுள்ளோம், உண்மையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக ஆதரித்தவர்களில் நான் முதன்மையானவன்” என்று, நேற்று பெமிம்பின் வாரிசான் பெர்சாமா ரக்யாட் நிகழ்வின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.