ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்கவியல் கார் எண் தகடுகள் அல்லது ஈ-தகடுகளை மலேசியா செயல்படுத்துவதற்கான நேரம் இது என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் (BN -ஆயர் ஈத்தாம்) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகில் 95 விழுக்காடு நாடுகள் ஏற்கனவே RFID இலக்கவியல் கார் எண் தகடு அமைப்புகளை செயல்படுத்தியுள்ளன. மலேசியா உட்பட 5 விழுக்காடு நாடுகள் மட்டுமே இன்னமும் சாதாரண எண் தட்டுகளைப் பயன்படுத்துகின்றன என்று, முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான அவர் கூறினார்.
இன்று புதன்கிழமை (மார்ச் 22) நாடாளுமன்றத்தில், 2023 பட்ஜெட்டில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒதுக்கீடு பற்றி குழுநிலையில் விவாதிக்கும் போது டாக்டர் வீ இதனை பரிந்துரைத்தார்.
புதிய கார் வாங்கும் போது, அக்ரிலிக் கார் எண் தகடுகளை வாங்குவதற்கு RM150 மற்றும் RM300 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஈ-தகடுக்கு தேவையான கூறுகளை வைப்பதற்கு இந்த தொகை பயன்படுத்தப்படலாம் என்றும் MCA தலைவருமான வீ மேலும் கூறினார்.
இதற்கிடையில், பொதுவாக மலேசியர்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலைப் போக்குவரத்துத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலை மேற்கொள்ள போக்குவரத்து அமைச்சகத்திற்கு அதிக ஒதுக்கீடு வழங்குமாறு டாக்டர் வீ அரசாங்கத்தை வலியுறுத்தினார்.









