பாலோவில் அடையாளம் தெரியாத மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிப்பு

நேற்று பாலோவில் உள்ள லாடாங் தேரே என்ற ஆற்றின் அருகே அடையாளம் தெரியாத மனித எலும்புக்கூடு ஒன்று, மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரால் கண்டெடுக்கப்பட்டதாக குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார்.

இது தொடர்பில் நேற்றிரவு 8.30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், குறித்த சடலம் அழுகி எலும்புக்கூடு மட்டுமே எஞ்சி இருப்பதால் அதன் பாலினம் மற்றும் வயதை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், எலும்புக்கூடு ஆற்றங்கரையில் இருந்து 6.1 மீட்டர் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டது.

தடயவியல் குழு ஆய்வு செய்ததில், எலும்புக்கூடு அருகே நீல நிற டி-சர்ட் மற்றும் நீண்ட கை ஸ்வெட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தனிப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மரணத்திற்கான உண்மையான காரணத்தை அடையாளம் காண, பிரேத பரிசோதனைக்காக உடல் என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனவே, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அல்லது உடலைக் அடையாளம் காட்டக் கூடியவர்கள் முன்வரலாம் என்றும், மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here