தென் செபெராங் பிறையில் உள்ள சுங்கை பகாப் தேசியவகை தமிழ்பள்ளியின் கட்டுமானத்தை புதுப்பிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
யாயாசான் ஏயோன் மலேசியா மற்றும் யாயாசான் டிடிக் நெகாரா ஆகிய நிறுவனங்களால் வழங்கப்படும் தொழில்நுட்ப பயமாக்கப்பட்ட வகுப்பறை (Smart Classroom) திட்டத்தைத் தொடங்கிவைத்த பிறகு, அவர் இது தொடர்பில் கருத்துரைத்தார்.
மார்ச் 22 அன்று மாநிலக் கல்வித் துறையிலிருந்து சுங்கை பகாப் தேசியவகை தமிழ்பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படும் கடிதம் குறித்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இரண்டு மாடி கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித்த பள்ளியின் விண்ணப்பத்திற்கு, கல்வி அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறித்த கடிதத்தில் பள்ளிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்மொழியப்பட்ட திட்டமானது RM14.511 மில்லியன் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள், 12 சிறப்பு அறைகள் மற்றும் பிற வசதிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.








